கொரோனா வைரஸை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்து ஒன்றுபட்டு சவால்களை வெற்றிக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது நாட்டுக்குள் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் வரவேற்புகுரியது, என்றும் தொடர்ந்து முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் கட்சித்தலைவர்கள் இதன்போது தெரிவித்தனர். அத்துடன் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எவ்வாறு குறுகிய காலத்திற்குள் முன்னேற்றுவது என்பது தொடர்பிலும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கட்சித்தலைவர்கள் மத்தியில் தெளிவுப்படுத்தினார். சதோச உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் போன்று பொருளாதாரம் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.