கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழி வகுக்கலாம்
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமகாலத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் நாடுகளுக்கான பொருளாதார சரிவுகள் என்பன இவ்வாறு மற்றுமொரு உலக யுத்தத்தினை ஏற்படுத்தலாம் என பிரித்தானிய படைத் தளபதி எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் இன்று உலக யுத்தங்கள் மற்றும் ஏனைய பிளவுகள் காரணமாக உயிர் நீத்தவர்களுக்கான நினைவு அஞ்சலிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரித்தானிய படைத்தளபதி நிக் கார்டெர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “உலக சமாதானம் தொடர்பான கவலையான, ஸ்திரத்தன்மையற்ற மற்றும் உலகளாவிய போட்டிகள் நிகழக்கூடிய ஓர் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதனால் பிராந்தியங்களுக்கு இடையிலான பிளவுகள் ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த சூழ்நிலையானது இன்னொரு உலகப் போரினை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்குமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த்த அவர், “நான் சொல்கிறேன் இது ஓர் அபாயம். நாம் குறித்த அபாய நிலை இத்தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.