கொரோனா: குணமடைந்த பின்னர் சுவிஸ் பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்
சுவிட்சர்லாந்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான பெண்களில் ஒருவரான Bettina Sooder அந்த நோயில் இருந்து மீண்டு வந்த பின்னர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மிலன் நகரில் ஆயத்த ஆடைகள் கண்காட்சியில் கலந்து கொள்ள சென்றவர் 26 வயதான சுவிஸ் இளம் பெண் Bettina Sooder.
சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் Bettina Sooder, மிலனில் இருந்து திரும்பிய பின்னர் திடீரென்று ஒரு நாள் அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி உடல் வலியும் இருந்தது எனக் கூறும் அவர், தனது சுவை மற்றும் வாசனை உணர்வை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நோயாளி போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை என்பதால், வேலைக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.
இருப்பினும், அவரது மேலாளரின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சூடருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து உடனையாக சூடரை மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனை சிகிச்சை, அதனையடுத்து குடியிருப்புக்கு திரும்பிய பின்னர் இரண்டு வாரங்கள் மீண்டும் தனிமைப்படுத்தல் என கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடிய சூடர், தற்போது மீண்டு வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது விசித்திரமான ஒரு உணர்வு என கூறும் சூடர், திடீரென்று நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு நாம் ஆபத்தானவர்களாக மாறுவது என்பது விசித்திரம் இல்லையா என்கிறார்.
கடந்த திங்கட் கிழமையில் இருந்து வேலைக்கு சென்று வரும் சூடர், மக்கள் தம்மிடம் இருந்து தள்ளியே இருக்க முயற்சிப்பதை தாம் கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என மக்கள் அஞ்சுவதாகவும், அதனாலையே தம்மிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.