கொரோனாவைக் கட்டுப் படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம்
கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.
இதேவேளை முதலாவது, இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தினை மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டவில்லை.
மேலும் இத்தகைய கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்யமுடியாத வகையில் அவர்களின் கைகள் கூட இராணுவத்தினரால் கட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.
மத்திய அரசாங்கத்தில் கூட துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள், கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் உள்ளனர்.
கொவிட் செயலணிக்கு பொறுப்பாக இராணுவத் தளபதியை நியமித்தது மாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டத்தினையும் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சில தடைகளும் ஏற்பட்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.