Main Menu

கொரொனா வைரஸ் -ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருவர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொங்கொங் நகரத்தில் இருந்து, கடந்த வாரம் ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானுக்கு பயணித்தது. இந்த கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் ஆறு பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.

‘கோவிட்-19’ எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதில், 500க்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை கப்பலில் இருந்து வெளியேற்றி, வைத்தியசாலையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையிலேயே சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இருவர் உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.