கொங்கோவில் அதிகார மாற்றம்: நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!

கொங்கோ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றிபெற்றுள்ளார். அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மற்றுமொரு எதிர்க்கட்சி வேட்பாளரான மார்டின் ஃபயூலு தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாரிய வன்முறைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற கொங்கோ ஜனநாயக குடியரசின் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஃபெலிக்ஸ் வெற்றிபெற்றதாக கடந்த வாரம் கொங்கோ தேர்தல் ஆணையகம் அறிவித்தது. எனினும், தற்போதைய ஜனாதிபதி கபிலாவுடன் ஃபெலிக்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளார் என அரச நிர்வாக எதிர்ப்பாளரான மார்டின் ஃபயூலு குற்றஞ்சாட்டினார். தாமே வெற்றிபெற்றதாக அறிவித்த ஃபயூலு, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றில் கடந்த வாரம் வழக்குத் தாக்கல் செய்தார். இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஷிசேகெடியே வெற்றிபெற்றுள்ளார் என அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1960ஆம் ஆண்டில் பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்ற கொங்கோ ஜனநாயக குடியரசில், 59 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக ஆட்சிமாற்றம் ஏற்படுகிறது.

அத்தோடு, அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக கபிலா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொங்கோ தேர்தல் அறிவிப்பின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்துள்ளதோடு, 59 பேர் படுகாயமடைந்தனர். 241 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !