கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு!

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணகொளபெலஸ்ஸ சிறையில், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதிகள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே, கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கேள்வியெழுப்ப சிறைக் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபையிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் குறித்த அமைப்பு முறைப்பாடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின்போது, இதுதொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கைதிகள் தாக்கப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தமது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு, குறித்த கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது.

இருப்பினும் அதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !