கேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்

கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மாநிலம் முழுவதும் சீர்குலைந்தது. அங்கு மறுசீரமைப்பு பணிகளுக்காக வெளிநாடுகளில் வாழும் கேரளவாசிகளிடம் இருந்து நன்கொடை திரட்ட மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி பினராயி விஜயனின் பயணத்தை தவிர, மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நிவாரண நிதி திரட்டுவதற்காக தற்போது அமீரகம் சென்றுள்ள அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மந்திரிகளின் வெளிநாடு பயணம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் நேரடியாக அனுமதி கேட்டதாகவும், அப்போது வாய்மொழியாக உறுதி அளித்துவிட்டு தற்போது தடை விதித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன்மூலம் பிரதமர் வார்த்தை தவறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது அங்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ள பினராயி விஜயன், ஆனால் கேரள வெள்ள விவகாரத்தில் தனது நிலையை அவர் மாற்றிக்கொண்டு இருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !