கேரளாவுக்கு அதியுயர் அபாய எச்சரிக்கை!

கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு அதியுயர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த 15 வருடங்களில் பெய்யாத அளவிற்கு கேரளாவில் மழை பெய்து வருகின்றது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

தொடர்ந்தும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்ற நிலையில், கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அதியுயர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 25 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

வயநாத் என்ற கிராமவாசியொருவர் குறிப்பிடுகையில், ”எமது கிராமத்தின் சுமார் 300 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. வீட்டிலிருந்த ஒரு துண்டு கடதாசியையேனும் எமக்கு எடுத்து வர முடியவில்லை. உடைகள், அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, சொத்து தொடர்பான ஆவணங்கள், எமது பிள்ளைகளின் புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தையும் கைவிட்டு வந்துவிட்டோம்” என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அக்கிராமத்தின் தலைவர் குறிப்பிடுகையில், சுமார் 1200 பேர் தமது கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து, கடந்த மூன்று தினங்களாக முகாம்களில் தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

கேரளா மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் பிரகாரம், இதுவரை 1,031 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அத்தோடு, மொத்தமாக 31,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக இதுவரை 25 நீர்த்தேக்கங்களின் அணைக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !