கேரளாவில் 23 வயதுக்கு முன்பு மது அருந்த தடை: அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற சிறப்பு கேரளாவுக்கு உண்டு. அதே போல நாட்டிலேயே அதிகமாக மது குடிப்பவர்கள் உள்ள மாநிலமும் கேரளா தான்.

ஆண்டுதோறும் கேரள அரசுக்கு  ரூ.40 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதில் 25 சதவீதம் மது விற்பனை மூலம் தான் கிடைக்கிறது. அந்த அளவுக்கு அந்த மாநிலத்தில் மது விற்பனை அதிகமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது பூரண மது விலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்-மந்திரியாக இருந்த உம்மண்சாண்டி அறிவித்தார். அதன்படி புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுப்பதில்லை. படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது என்று பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து கேரளாவில் மது விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் மது அருந்துவதற்காக தற்போது உள்ள 21 வயது என்ற வரம்பை 23 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கேரள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

23 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் கேரள மதுபான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அமைச்சரவையின் பரிந்துரை கேரள கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அனுமதிக்கு பிறகு இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வரும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !