கேரளாவிற்கு மத்திய அமைச்சர் விஜயம்:100 கோடி உடனடி நிவாரணம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்டார்.  அத்துடன் வெள்ளப் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

கேரளாவந்த அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகொப்டரில் பார்வையிட்டதோடு முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனிடையே இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிக்காக இராணுவம், கடற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், ’வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான நேரத்தில் உள்ள கேரள மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ளப் பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !