கேப்பாப்புலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேசியிருந்தனர்.

கேப்பாப்புலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசாங்கம் பாராமுகமாக உள்ளதாக கூட்டமைப்பினர் இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

இதன்போது, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

மாற்றுக் காணிகள் இல்லாமை காரணமாக அந்த முகாமை வேறு இடத்துக்கு நகர்த்த முடியாதுள்ளதாக ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதி பதிலளித்தார்.

எனினும், அருகில் பல அரச காணிகள் உள்ள போதும் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கிறது என ஜனாதிபதியிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து மீண்டும் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உடனடியாக கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !