கொரோனா வைரஸ் – வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த இஸ்ரேல் முடிவு!
உலகினை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து தமது நாட்டுக்கு வரும் அனைவரையும் கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பலதரப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடினமான முடிவு என்றாலும் சமூகத்தின் ஆரோக்கியகம் தொடர்பில் கவனம் கொள்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய சுகாதார அமைச்சு தனது நாட்டு பிரஜைகளுக்கு முன்னதாகவே இத்தாலி உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நாடுகளுக்கான பயணத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தியிருந்தது.
அத்துடன் இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட கொரோனா தொற்றினால் அதிகளவாக பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தனது நாட்டு பிரஜைகளையும் 14 நாட்கள் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இந் நிலையிலேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்றினால் இதுவரை இஸ்ரேலில் 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.