கூட்டு ஒப்பந்த விவகாரம்: கொட்டகலை பெருந்தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்து, கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக இருப்போமென தெரிவித்த குறித்த மக்கள், ஆயிரம் ரூபாய் சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனத்தை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்டத்தின் தேயிலைக் கொழுந்து சேகரிக்கும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 300 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, சம்பள உயர்வை வழியுறுத்திய கோஷங்களை எழுப்பி பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயை நாளொன்றின் அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த பேச்சுவார்த்தைகளின்போது இதற்கு உடன்படாத முதலாளிமார் சம்மேளனம் 15 வீத சம்பள உயர்வை தருவதாக குறிப்பிட்டுள்ளமை தமது வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்குமென தொழிலாளர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
பண்டிகை காலம் நெருங்கிவருவதோடு, பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன. இந்நிலையில், தமது நிலையை கருத்திற்கொண்டு, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் தமக்கு சிறந்த தீர்வை பெற்றுத்தர வேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.