குழந்தைகள் அறிவுத்திறனை மேம்படுத்தும் உள் கட்டமைப்புகள்

அழகிய படங்கள்:

வீடுகளின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் பல்வேறு பறவைகள், அழகிய விலங்குகள், சிரித்த முகம் கொண்ட ஓவியங்கள் மற்றும் அறிவியல் சார்பான கருத்துக்கள் கொண்ட ஓவியங்கள் ஆகியவற்றை படங்களாக அல்லது வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்டதாக வைத்து அலங்கரிக்கலாம். அவர்களது கவனத்தை கவரும் கருத்துள்ள விஷயங்களை ஓவியங்கள் அல்லது சிலைகளாக வீடுகளில் வைக்கவும் வாஸ்து சாஸ்திரம் பரிந்துரை செய்கிறது.

மனோதத்துவம்:

எதிர்மறை கருத்துக்கள் கொண்ட படங்கள் மற்றும் சிலைகளை வீடுகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், காட்டு விலங்குகளின் சண்டை காட்சிகள், இரையை கடித்து குதறுவது, போர் காட்சிகள், ரத்தம் சொட்டுவது, கத்தி, வீச்சரிவாள் ஆகியவை அடங்கிய படங்கள் வீடுகளில் இருக்கும்பட்சத்தில், அவர்களது மன இயல்பு கடினத்தன்மை கொண்டதாக மாறிவிடலாம் என்ற மனோதத்துவம் கவனிக்கத்தக்கது.

பழங்களின் படங்கள்:

குழந்தைகள் வளரும் பருவத்தில் மென்மையான உணர்வுகளை உண்டாக்கும் காட்சிகள் அடங்கிய படங்களை வீடுகளில் அவர்களது பார்வையில் படும்படி வைப்பதில் சரியாக செயல்படுவது முக்கியம். முக்கியமாக, உணவு மேசை மீது பழங்கள் வைப்பது, உணவு அறைகளின் சுவர்களில் பல்வேறு பழங்கள் அல்லது உணவுகளின் படங்களை மாட்டி வைப்பது ஆகியவற்றால் அவர்களது கவனம் அதன்மீது ஈர்க்கப்படும். குறிப்பாக, திராட்சை, அன்னாசி, பலா, மாம்பழம் போன்ற படங்களால் அலங்கரிக்கப்பட்ட உணவு அறைகள் நல்ல உணர்வுகளை உண்டாக்குகின்றன.

மெல்லிய வண்ணங்கள் :

குழந்தைகளின் முக்கியமான செயல்பாடாக விளையாட்டு இருப்பதால், அவர்களது உணர்வுகளுக்கு மென்மையான தூண்டுதல் தரக்கூடிய விதத்தில் நமது அணுகுமுறைகள் இருப்பது அவசியம். அடர்ந்த வண்ணங்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தும் என்ற நிலையில், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் இள நீலம், மெல்லிய பிங்க் நிறம், இளம் பச்சை போன்ற நிறங்கள் குழந்தைகளின் அறிவுத் திறனை ஊக்குவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த காரணத்தையொட்டியே அவர்களுக்கான பொம்மைகள் கருப்பு அல்லது அடர்ந்த வண்ணங்களில் தயாரிக்கப்படுவதில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !