குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் தடுக்க ஆலோசனை

முன்பு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த நீரிழிவு… முந்தைய தலைமுறையில் 40 வயதிலேயே வந்துவிட்ட நீரிழிவு… இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு… இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.

குழந்தைகளிடம் நீரிழிவு வராமல் தடுக்க பெற்றோருக்கு சில ஆலோசனைகள்

‘‘ஒருநாளில் இன்றைய குழந்தைகள் உணவின்மூலம் எவ்வளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் அதிர்ச்சியாகவே இருக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட், சாஸ், ஜாம், பிஸ்கெட், கேக், பிரட் போன்ற நொறுக்குத்தீனிகள் எல்லாமே சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள்.

நூடுல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், பப்ஸ் போன்ற உணவுகள் எல்லாவற்றிலுமே பதப்படுத்திகளையும், அறிவுறுத்தப்பட்ட அளவைவிட உப்பு, சர்க்கரையையும் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பிப் பருகும் மென்பானங்களில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் இந்த குளிர்பானங்களின் லேபிளில், ‘இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல மில்க்‌ஷேக், பழச்சாறுகளிலும் சர்க்கரை க்யூப்களை அதிகமாக சேர்க்கும் பழக்கம் இருக்கிறது.

இப்படி இனிப்பு, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் உணவுகளைத் தொடர்ந்து அளவுக்கு மீறி சாப்பிடும்போது உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு உட்பட பல பிரச்னைகளில் போய்விடுகிறது. இந்நிலையை மாற்ற கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, சிறுதானியங்களில் செய்யும் இனிப்பு வகைகள், கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்று நம்நாட்டு உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்து கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு முடிந்தவரை தடா போட வேண்டும்.

அரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களில் செய்த டிபன் வகைகள், சிற்றுண்டி வகைகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் ஜூஸ், சூப் போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். சர்க்கரை சேர்க்காத ஃப்ரூட் ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

நீரிழிவு பற்றியும் ஆரோக்கியக் கேடான உணவுப்பழக்கம் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிப் புரிய வைக்கும் கடமையும் பெற்றோர், ஆசிரியர், உறவினர்களுக்கு உண்டு. கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்களை அனுமதிக்காமல் முடிந்தவரை பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என வெளியிடங்களில் விளையாட கூட்டிச் செல்வதும் அவசியம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !