குழந்தைகளிடம் காணப்படும் வேண்டாத பழக்கங்கள்

வேண்டா பழக்கங்கள் :

தலைசொறிதல், மற்றவர்களை கேலி செய்தல், பொது இடங்களில் பாடல்களை முணுமுணுத்தல், கத்தரிக்கோல் கையில் கிடைத்தால் காகிதங்களை துண்டு போடுதல், கம்பு கைகளில் கிடைத்தால் சும்மா சுழற்றிக் கொண்டிருப்பது, விரல் சப்புவது, மற்றவர்களிடம் வம்பிழுப்பது, சூயிங்கம் மெல்வது, புகைப்பிடித்தல், பேனா, பென்சில், புத்தகம் ஆகியவற்றின் வாசனைகளை நுகரும் வித்தியாசமான பழக்கம் போன்றவையும் குழந்தைகளிடம் உள்ள வேண்டா பழக்கங்களில் சிலவாகும்.

கத்தரிக்கோலை தேவையின்றி எடுத்து விளையாடக்கூடாது. புதுவித வாசனைகளை நுகரும் பழக்கம் சில நேரங்களில் பேராபத்தாய் முடிய வாய்ப்பு உண்டு. சில வாசனைகள் மயக்கத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களை தடை செய்ய வேண்டும்.

கத்தரிக்கோலை முறையாகப் பயன்படுத்தி காகிதங்களை வெட்டி உருவங்கள், வடிவங்களை உருவாக்கும் ‘ஒரிகாமி’ கலையில் ஆர்வம் வளர்த்துக் கொள்ளலாம். காகித கலைப் பொருட்கள் செய்தும் பொழுது போக்கலாம். இதனால் திறமைகள் வளர்வதுடன், நினைவுத்திறனும், கற்பனைத்திறனும் மேம்படும். இது நன்றாக பாடம் படித்து வெற்றி பெற துணை செய்யும். அவசியமற்ற வேடிக்கை செயல்களை கைவிட்டு, அவசியமானவற்றை செய்யும்போது வெற்றிகள் விரைந்தோடி நம்மிடம் வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை!

மூக்கை சொறிதல் :

நம்மை அறியாமல் செய்யும் மோசமான செயல்களில் ஒன்று மூக்கை நோண்டுதல். நாசித் துவாரங்களில் தேவையற்ற தூசுகள் நுழைந்தால் மூக்கு இயற்கையாகவே தும்மலை வரவழைத்து, அவற்றை அப்புறப்படுத்திவிடும். இருந்தாலும் சில நேரங்களில் நாசித் துவாரங்களில் சேரும் அழுக்குகளும், தூசிகளும் அவற்றை சொறிந்து அகற்றும் உணர்வைத் தூண்டலாம்.

அப்போது பொது இடங்களிலும் நம்மை அறியாமலே கைகள் மூக்கைத் தேடிச் செல்லும். இருந்தாலும் அது கட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும். இந்த பழக்கம் மற்றவர்களிடம் உங்களை சுத்தம் மற்றும் ஒழுக்கமற்றவராக காண்பிக்கும். கேலிப் பேச்சுக்கு வழிவகுக்கும். எனவே இதை தவிர்க்க வேண்டும். குளித்து முடித்தவுடன், காதுகளையும், மூக்கையும் சுத்தமான பஞ்சுத் துணிகளால் ஒற்றி எடுத்து சுத்தமாக்கிக் கொண்டால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கிறுக்கும் பழக்கம் :

சிலருக்கு பாட வகுப்பிலும், மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதும், ஓய்வாக இருக்கும் போதும் பேனா, பென்சிலை எடுத்து ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் பழக்கம் இருக்கும். உங்கள் பாடப் புத்தகம், குறிப்பு புத்தகங்களில் இந்த கிறுக்கல்கள் இருந்தால் நீங்களும் அவசியமற்ற அந்தப் பழக்கத்திற்கு அடிமை என்று கூறிவிடலாம்.

இதனால் நோட்டு புத்தகங்கள் பாழாவதுடன், ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனிக்க முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும். இது படிப்பில் பின்தங்கிய நிலையை உருவாக்கும். இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரியவர்களான பின்பும், அலுவலக நேரத்தில் இப்படி கிறுக்கி அவப்பெயரை சந்திப்பது உண்டு. தவறான இந்த பழக்கத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கிறுக்கிக் கொண்டிருக்கும் பழக்கத்தை ஓவியம் வரையும் ஆற்றலாக மாற்றி வெற்றி பெறுங்கள்.

காது குடைதல் :

மூக்கை நோண்டுவது போலவே சிலருக்கு காது குடையும் பழக்கம் உண்டு. காதுகளில் அழுக்கு எதுவும் சேராமலே, சுகத்திற்காக சும்மா காது குடைபவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் பலர் பென்சில், பேனா, கொண்டை ஊசி உள்ளிட்ட பொருட்களையும் காது குடைய பயன்படுத்துவது உண்டு. இது ஆபத்தான செயலாகும். அவசியமற்ற இந்தப் பழக்கத்தால் செவிப்பறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. காதில் புண்களும் ஏற்படலாம். முடிந்த வரையில் காது குடைவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பஞ்சுத் துணி அல்லது பஞ்சு குச்சத்தால் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். பிஞ்சுக் குழந்தைகள் தாங்களாக காது குடையாமல், பெற்றோர் உதவியுடன் காதுகளை சுத்தம் செய்யுங்கள்.

கடித்து குதறுதல் :

நகம் கடித்தல், கையில் கிடைக்கும் பென்சில், பேனா மூடி மற்றும் பொருட்களை கடித்துக் கொண்டிருப்பதும் சிலருக்கு வாடிக்கை. சிலர் சட்டை காலரையும், இன்னும் சில பொருட்களையும் கடித்துக் கொண்டே இருப்பார்கள். தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் இதுவும் ஒன்று. நக இடுக்குகள் மற்றும் பொருட்களில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உண்டு. பென்சில் நுனி போன்ற ரசாயன பொருட்களும் வாய்க்குள் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் நோய்த் தொற்றும் மற்றும் பல்வேறு பின்விளைவுகளும் ஏற்படலாம். எனவே கையில் கிடைத்ததையெல்லாம் கடித்துக் குதறும், வெறிநாய்க் குணத்தை விட்டொழியுங்கள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !