குளிர்கால ஒலிம்பிக்: வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா பாராட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார். இது தொடர்பாக இரு நாடுகளும் விரைவாக ஆலோசனை நடத்தி சாத்தியக்கூறுகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கிம் கருத்தை வரவேற்ற தென்கொரிய அதிபர் முன் ஜே-இன், உடைந்த உறவை முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறியிருந்தார்.

வடகொரியா – தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இரு நாட்டு உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை ரஷ்யா வரவேற்றுள்ளது. மாற்றத்திற்கான முதல்படியாக இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு துறை கருத்து தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி என பல்வேறு தடைகளுக்கு வடகொரியா உள்ளாகியுள்ள நிலையில், கிம்-மின் இந்த முடிவு அவர் கீழே இறங்கி வர தயாராக உள்ளார் என்பதையே காட்டுகிறது என அரசியல் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !