குற்றங்களை மறுத்தார் மஹிந்தவின் உறவினர்! – அமெரிக்க நீதிமன்றில் வாதம்

அமெரிக்காவுக்கு முன்னாள் இலங்கை தூதுவரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினருமான ஜாலிய விக்ரமசூரிய, தான் குற்றவாளி இல்லை என அமெரிக்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இலங்கைக்கான புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்ததில் பண மோசடி செய்தமை, குடிவரவு குடியகல்வுத் திணைக்கள நடைமுறைகளை மீறியமை உட்பட ஜாலியவுக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரங்கள் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தற்பொழுது தலைமறைவாகியிருக்கும் ஜாலிய விக்ரமசூரிய கடந்த 29ஆம் திகதி அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதன் வழக்கு விசாரணை நீதிபதி தான்யா எஸ்.சுட்கான் முன்னிலையில் இடம்பெற்றபோது, வழக்கில் சட்டத்தரணிகளான சியா முஸ்தபா மற்றும் அரவிந்த்.கே.லால் ஆகியோர் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் ஆஜராகினர். இவர்கள் விசாரணையின் போது குற்றவாளி இல்லை என்ற சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். எனினும் வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் ஜாலிய விக்ரமசூரியவை விடுதலை செய்து, அவரிடமிருந்து ஏனைய மோசடிகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதுபற்றி இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், “இந்த விடயம் தொடர்பாக அவர் சிறைக்கு செல்லமாட்டார்” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !