Main Menu

குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

மேஷம்: குரு பெயர்ச்சி 2020 – 2021

அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி
பொது : இதுநாள் வரை குருவின் பார்வை பலத்துடன் செயல்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சலைத் தரக்கூடும். அலைச்சல் அதிகமானாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும், செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு குருவின் மகர ராசி சஞ்சாரம் தொழிலில் வளர்ச்சியான பலன்களையே தரும்.

நிதி : தன ஸ்தானத்தின் மீது விழும் குருபகவானின் பார்வை சேமிப்பினை உயர்த்தும். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனங்களை புதிதாக மாற்ற நினைப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது நல்லது. தனியார் நிதி நிறுவனங்கள், சிட்பண்ட்ஸ் ஆகியவற்றில் அதிக எச்சரிக்கை தேவை. ஆன்மிகச் செலவுகள், தான தர்ம செலவுகள் கூடும்.
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் சலசலப்புகள் குறையும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு காணாமல் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். பணி நிமித்தமாக குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறையும்.
கல்வி : பொதுஅறிவு அதிகரிக்கும். ஞாபகசக்தியை கூட்டும் வகையில் மனப்பாடப் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வேகமாக எழுதும் கலையில் கூடுதல் பயிற்சி தேவை. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும். உயர்கல்வி மாணவர்கள் வித்தியாசமான துறைகளில் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள்.
பெண்கள் : குடும்பப் பிரச்னைகளில் முன்னின்று செயல்படுவீர்கள். கணவரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. முக்கியமான விவகாரங்களில் உங்கள் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் கவனத்துடன் பேசவேண்டியது அவசியம். உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பினைப் பெறுவீர்கள்.
உடல்நிலை : ரோக ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை ஆரோக்யத்தை சீராக வைத்திருக்க உதவும். எனினும் பித்தரோகம், பார்வைக் கோளாறு ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

தொழில் : பத்தாம் பாவக குருவின் மூலமாக உத்யோகத்தில் முன்னேற்றம் தரும் மாற்றத்தினைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினைக் காண்பர். சுயதொழில் செய்வோருக்கு அதிக அலைச்சல் உண்டானாலும் அதற்குரிய தனலாபம் என்பது நிச்சயம் கிடைக்கும். விவசாயம், சமையல், உணவுப்பொருள் வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றம் தரும் காலமாக அமையும்.
பரிகாரம் : செவ்வாய் தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்.

பரணி :  பத்தில் குரு பதவி உயரும் 70/100

பொது : பத்தில் குரு பதவியை பரிசளிப்பார் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். செவ்வாயை ராசிநாதனாகவும், சுக்ரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொருளாதார ரீதியாக பல நன்மைகளைச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அதற்காக அதிக அலைச்சலைக் காண வேண்டியிருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் வாழ்வியல் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.
நிதி : ஜனவரி  ஆறாம் தேதிக்குள்ளாகவே நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரப் பொருட்களில் அதிக செலவு செய்யாமல் அசையாச் சொத்து சேர்ப்பதில் கவனம் செல்லும். நீண்ட நாள் கனவாக இருந்து வரும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க இந்த ஒரு வருட காலம் துணைபுரிகிறது.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினையும் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் குறையும். பிரச்னைகளின் போது அதிகம் பேசாமல் அழகான புன்னகையின் மூலம் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை.
கல்வி :  ஜனவரி  ஆறாம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கண்டு வருவார்கள். நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தங்கள் பொது அறிவுத்திறனை உயர்த்திக் கொள்ள இயலும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் முன்னிலை பெறுவீர்கள்.
பெண்கள் : குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். குடும்ப உறுப்பினர்களில் யார் தவறு செய்தாலும் பழியினை நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும். கணவரோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றினாலும் புன்சிரிப்பின் மூலம் எளிதாக கடந்து செல்வீர்கள். மனதில் உள்ள குறைகளை அவ்வப்போது உங்கள் நலம்விரும்பிகளிடம் பகிர்ந்துகொள்வது நல்லது.
உடல்நிலை : உடல் ஆரோக்யத்தைப் பேணிக்காக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரைவியாதி, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள். பார்வையில் குறைபாடு, உடம்பின் மேற்தோலில் உண்டாகும மாறுபாடு ஆகியவற்றில் சிறப்பு கவனம் கொள்ளுங்கள்.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் பேச்சுத்திறமை மூலம் முக்கியத்துவம் பெறுவார்கள். சுயதொழில் செய்வோருக்கு முகராசி கைகொடுக்கும். ஸ்வீட் ஸ்டால், ஜவுளி, பித்தளை பாத்திர வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். நகைக்கடை, ஆபரணத்தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கார்த்திகை 1ம் பாதம் : அலைச்சலுடன் ஆதாயம் சேரும் 65/100

பொது : முன்கோபத்தினைக் கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் காண இயலும் என்பதை அனுபவ பூர்வமாக உணர உள்ளீர்கள். குருவின் பார்வை பலத்தினை அடுத்து வரும் காலத்தில் இழந்திருப்பதால் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. சூரியனை நட்சத்திர அதிபதி  ஆகவும், செவ்வாயை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அதிக அலைச்சலைத் தந்தாலும் முடிவில் வெற்றி நிச்சயம் என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காமல் பொறுமையாக ஆலோசித்து முடிவெடுங்கள்.

நிதி : பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி புதிய சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் சேமிப்பு என்பது சாத்தியமே. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். ஷேர்மார்க்கெட், மியூச்சுவல் பண்ட் சேமிப்புகள் நன்மை தரும்.

குடும்பம் : குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டிருந்தாலும் முன்கோபத்தின் காரணமாக அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வதன் மூலம் நீண்டநாள் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண இயலும். உறவினர்களின் வழியில் அதிக செலவுகளைக் காண்பதோடு புதிய பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் வந்து சேரும்.
கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மார்ச்  மூன்றாம் தேதி முதல் தொழில்முறைக் கல்வி பயிலும் மாணவர்கள் அபாரமாக செயல்படுவார்கள். அறிவியல் துறை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நற்பெயர் அடைவர். மனப்பாடம் செய்வதை விட பாடங்களைப் புரிந்து படிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். செய்முறைத் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

பெண்கள் : நாவடக்கம் என்பது அவசியம் தேவை. நல்லது என்று நினைத்துப் பேசப்போக அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உங்களுக்கு எதிராகத் திரும்பக் கூடும். பிரச்னைகளின் போது கோபத்தினை வெளிப்படுத்தாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது நல்லது. பணவிவகாரங்களை தனித்துக் கையாளுவது நல்லதல்ல.
உடல்நிலை : உஷ்ணத்தின் காரணமாக சருமவியாதிக்கு ஆளாக நேரிடும். உடம்பின் மேற்தோலில் உண்டாகும மாறுபாட்டினை உடனுக்குடன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. மே  24ம் தேதி முதல் ஜூலை  இறுதி வரை உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடலாம். எனினும் உங்களது நற்பெயரின் மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்வீர்கள். சுயதொழில் செய்வோர் தடாலடியான பேச்சின் மூலம் சாதித்து வருவர். என்றாலும் வாடிக்கையாளர்களின் முகம் கோணாமல் நடப்பது அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயம் செய்வோர் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க பக்கத்து நிலத்துக்காரர்களை அனுசரித்து நடக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் : ஞாயிறு தோறும் முருகப்பெருமான் வழிபடுங்கள்

ரிஷபம்: குரு பெயர்ச்சி 2020 – 2021

கார்த்திகை 2, 3, 4ம் பாதம் : ஒன்பதாமிட குரு உயர்வு தரும் 75/100

பொது : குருவின் சிறப்புப் பார்வையினைப் பெறுவதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பாக்ய ஸ்தானத்தில் குருவின் அமர்வு அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் என்பதால் புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். ஜென்ம ராசியில் நீச பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகு நெகட்டிவ் சிந்தனைகளைத் தந்தாலும், குருவின் பார்வை பலம் ராகுவை பாசிட்டிவ் ஆக செயல்பட வைக்கும். சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும், சுக்ரனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வெற்றியைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

நிதி : அஷ்டமத்து குரு விலகியிருப்பதால் அநாவசிய செலவுகள் குறையும். சேமிப்பில் உயர்வினைக் காண்பீர்கள். அதே நேரத்தில் நிதி நிலையை வேகமாக உயர்த்த வேண்டி ராகு தரும் குறுக்கு வழிகளை கையில் எடுப்பது கூடாது. அதிகமாக ஆசைப்பட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பண விவகாரங்களை தகுந்த துணையுடன் கையாள்வது நல்லது.

குடும்பம் : பிடிவாத குணத்தினை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்துவதால் அவ்வப்போது பிரச்னைகள் உருவாகும். இருந்தாலும் ஜென்ம ராசியின் மீது விழும் குருபகவானின் பார்வை உங்கள் மனதில் நல்லெண்ணெத்தை உருவாக்கும். தம்பதியருக்குள் பிரச்னை உருவாகும்போது நீங்கள்தான் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். உடன்பிறந்தோர் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கல்வி : இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் புத்திகூர்மை அதிகரிக்கக் காண்பீர்கள். அறிவியல் பிரிவு மாணவர்கள் அபார வளர்ச்சியினை அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். மாணவர்களிடையே தேசபக்தி கூடும். என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட், கைடு போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவ, மாணவியர் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவது நல்லது. பேச்சினில் அடக்கம் தேவை. கிண்டலாகப் பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதைப் புண்படுத்தக் கூடும். தங்கம், வெள்ளி நகைகள் சேரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கச் செல்லும்போது தகுந்த துணையுடன் செல்ல வேண்டியது அவசியம்.
உடல்நிலை : ராகுவின் நீச பலத்தினால் உடல்நிலையில் சிரமம் தோன்றினாலும் குருவின் பார்வை உங்களை காக்கும். தொற்று நோய்க்கான வாய்ப்பு உண்டு என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. பெண்கள் தலையில் பேன், பொடுகு தொல்லையால் அவதிப்படுவர். 24.05.2021 முதல் 24.07.2021 வரை உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.

தொழில் : அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் உண்டாகும் பிரச்னையின் காரணமாக இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவதால் பதவி உயர்விற்கான வாய்ப்பிற்கு போராட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் காண நேர்ந்தாலும் அதற்குரிய தனலாபத்தினையும் காண்பார்கள். ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம் : ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் ஜபிப்பதோடு சிவவழிபாடு செய்து வர வெற்றி சாத்தியமாகும்.

ரோகிணி : மனதில் மகிழ்ச்சி குடிபுகும் 70/100

பொது : கடந்த சில காலமாக தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சாதகமான பலனை உண்டாக்கும். ஒன்பதாம் பாவகத்திற்கு வரும் குரு உங்கள் முயற்சிகளுக்குத் துணை நிற்பார். தடை விலகுவதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நான்கு பேர் மத்தியில் உங்களை முன்னிறுத்தி செயல்படுவீர்கள். தனலாபம் குறைவாக இருந்தாலும் பெயரும் புகழும் சம்பாதிப்பீர்கள். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகவும் சுக்ரனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி குடிபுகும் நேரம் இது.

நிதி : ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் நிதி நிலை நன்றாகவே உயர்வடையும். வீண் பகட்டிற்காக ஆசைப்படாமல் தேவைக்கு மட்டும் செலவழிப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது நன்மை தரும். ஷேர் மார்க்கெட், ம்யூச்சுவல் பண்டு முதலீடுகள் எதிர்காலத்திற்கு பயன்தரும் வகையில் அமையும். கிரெடிட் கார்டு உபயோகத்தின் போது எச்சரிக்கையுடன் கூடிய சிறப்பு கவனம் அவசியம் தேவை.

குடும்பம் : குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்க முயற்சிப்பீர்கள். அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராகப் பேசும்போது மனம் உடைந்து போகிறீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றுத் தரும். உறவினர்களிடம் பேசும்போது அதிக எச்சரிக்கை தேவை. சுபநிகழ்வுகளில் முன்னின்று செயல்பட்டு எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள்.

கல்வி : மாணவர்கள் கலந்துரையாடல் மூலம் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்வார்கள். ஆசிரியர்களிடம் தர்க்கத்தில் ஈடுபடாமல் பணிவோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வேதம், ஜோதிஷம் பயிலும் மாணவர்களுக்கு முக்கியமான நேரமாக அமையும். கலைத்துறை சார்ந்த மாணவர்கள் சாதிப்பார்கள். இன்ஜினியரிங் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்கள் : வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பலவீனம் அடைகிறீர்கள். இடம், பொருள் அறிந்து பேச வேண்டியது அவசியம். அநாவசியமான பேச்சின் மூலம் அவப்பெயர் உண்டாகலாம். வீண்வதந்திகளால் ஒரு சில சிரமத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உண்டு.

உடல்நிலை : வயிறு சார்ந்த பிரச்னைகள், வாயுப்பிடிப்பு ஆகியவற்றால் அவதிப்பட நேரிடலாம். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மன நிலையில் ஒரு சில பிரச்னைகள் தோன்றக்கூடும். கவனம் தேவை.

தொழில் : ஜனவரி  ஆறாம் தேதி முதல் தொழில்முறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எல்லோருடன் எளிதாகப் பழகி வருவதன் மூலம் அலுவலகத்தில் நற்பெயர் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் முகராசியின் மூலம் முன்னேற்றம் கண்டு வருவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்குவழக்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விவசாயம், மளிகை, ஹோட்டல் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்து வாருங்கள்.

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் : செலவுக்கேற்ப வருமானம் கூடும் 70/100

பொது : அஷ்டமத்துச் சனி மற்றும் குருவினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஆறுதல் தரும் வகையில் அமையும். மனதில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகி மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குருவின் பார்வை பலம் புதிய உற்சாகத்தைத் தரும். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும், சுக்ரனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் அன்பிற்கு மட்டும் கட்டுண்டு நடப்பீர்கள். இருந்தாலும் ஒரு சில நேரத்தில் உள்ளுணர்வையும் மீறி அவசரப்பட்டு செயல்படுவதால் ஒரு சில இழப்புகளை சந்தித்து வருகிறீர்கள்.

நிதி : சேமிப்பில் பெரிதாக உயர்வினைக் காண இயலவில்லை என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். முதலில் செலவுக்கணக்கு மனக்கண் முன்பு வந்து நின்றாலும் அதற்கேற்ற பொருள்வரவினையும் உடனடியாகக் காண்பீர்கள். பணம் கொடுக்கல்,வாங்கல் சார்ந்த விவகாரங்களில் புதிய நபர்களை நம்பி செயல்படுவது நஷ்டத்தைத் தந்துவிடும். மாற்று மதத்தினருடன் நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இறங்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குடும்பம் : குடும்பத்தினரிடம் அதிகாரத்தை விடுத்து அன்போடு பேசி வருவதன் மூலம் பல பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இயலும். உடன்பிறந்தோர் வழியில் ஒரு உபத்திரவத்தை சந்திக்க நேர்ந்தாலும் சமாளிப்பீர்கள். உறவினர்கள் வழியில் கலகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் உறவினர்கள் மூலம் உண்டாகும் பிரச்னைகளை வெற்றி கொள்ள இயலும். ஒரு சிலருக்கு தாத்தா, பாட்டி வழி சொத்து எதிர்பாராத வகையில் நற்பலனைத் தரும்.

கல்வி : இன்ஜினியரிங் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். மருத்துவம் பயிலும் மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மார்ச் மூன்றாம் தேதி முதல் சிறப்பான நேரம் துவங்குவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதன் மூலம் கல்வி நிலையில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும்.

பெண்கள் : வீண் பேச்சினைத் தவிர்ப்பதன் மூலம் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. அவர்களுக்கு செய்யும் சேவை நிறைவான மன நிம்மதியைத் தரும். தம்பதியருக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் காணாமல் போகும். மே  24ந் தேதி முதல் குடும்பத்தில் உங்கள் தனிப்பட்ட முயற்சியால் செல்வச் சேர்க்கை உண்டாகக் காண்பீர்கள்.

உடல்நிலை : ஜென்ம ராசியில் ராகுவின் அமர்வினால் உடல்நிலையில் சிறு சிறு குறைகளைக் கண்டு வந்தாலும் குருவின் பார்வை அவற்றை நிவர்த்தி செய்யும். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. உடம்பின் மேற்தோலில் உண்டாகும் அலர்ஜிகளை உடனுக்குடன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
தொழில் : சுயதொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. போக்குவரத்துத் துறை பணியாளர்கள் புதிய சாதனை படைப்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன்பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதன் மூலம் நற்பெயர் காண்பர். டிராவல்ஸ், கூரியர், பார்சல் சர்வீஸ், எலக்ட்ரிகல்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
பரிகாரம் : கண்ணனை வழிபட கவலைகள் தீரும்.

மிதுனம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : பொறுமையே பெருமை தரும் 40/100

பொது : இதுநாள் வரை இருந்து வந்த குருவின் பார்வை விலகுவதாலும் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் குரு அமர்வதாலும் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க உள்ளீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமைவதால் மன வருத்தம் உண்டாகும். நட்சத்திர அதிபதியாக செவ்வாயையும் ராசிநாதனாக புதனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் காலம் சற்று சோதனையைத் தரக்கூடும்.

நிதி : செலவினைக் கட்டுப்படுத்த சிக்கன முயற்சியைக் கடைபிடித்தாலும் வீண்விரயம் கூடுவதாக உணர்ந்து வருவீர்கள். இதனால் மனதிற்குள் ஒரு விதமான வெறுப்புணர்வு குடிபுகலாம். எது அவசியம், எது அநாவசியம் என்பதை முடிவெடுக்க இயலாமல் செலவழிக்கும் விஷயத்தில் தடுமாற்றம் காண்பீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு.

குடும்பம் : குடும்பத்தினர் மீது அதிக பாசம் வைத்திருக்கும் நீங்கள் அவர்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் செயல்படவில்லையே என்று மன வருத்தம் கொள்வீர்கள். பிரதிபலன் எதிர்பார்த்து அது கிடைக்காத பட்சத்தில் மனதில் விரக்தியான எண்ணங்களுக்கு இடமளித்து வருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனநிலை புரியாது தவிப்பர். உங்களுடைய எண்ணத்தை மறைக்காமல் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதால் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.

கல்வி : தற்போதைய சூழலில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது போல் தெரிந்தாலும் மார்ச்  மூன்றாம் தேதி முதல் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தேர்வு நேரத்தின்போது நேரம் நன்றாக இருப்பதால் கவலை இல்லை. இருந்தாலும் அன்றன்றைய பாடங்களை அவ்வப்போது படித்து புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது. ஆன்லைன் வகுப்புகளில் சிரமத்தினைக் காணும் மாணவர்கள் தனிப்பயிற்சி வகுப்பினில் ஆசிரியரிடம் தயங்காமல் கேள்வி கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்.

பெண்கள் : பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளைக் கேட்டு நடப்பதை விடுத்து உங்கள் மனதிற்கு சரியென்று படுவதை செய்துவந்தால் நிம்மதியாக இருக்கலாம். அநாவசிய சந்தேகங்கள் குடும்பத்தில் பிரச்னையைத் தோற்றுவிக்கும். மனதில் உண்டாகும் சந்தேகங்களை வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது.

உடல்நிலை : ரோக ஸ்தானத்தில் கேதுவின் அமர்வு பல்வேறு பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வலுப்பெறும். குருவின் பலமும் குறைவதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம் தேவை. உடம்பில் உண்டாகும் மாறுதல்களை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மனக்கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலும்.

தொழில் : ஜீவன ஸ்தான அதிபதி குரு எட்டில் அமர்வதால் தொழில்முறையில் இடைஞ்சல்களைக் காண உள்ளீர்கள். சுயதொழில் செய்வோர் யாரையும் நம்பாது தனித்து செயல்பட வேண்டியது அவசியம். பணியாளர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் மூலம் சிரமத்தினை சந்திப்பார்கள். அவர்கள் செய்யும் தவறு உங்களைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கக்கூடும். மேலதிகாரியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்கள் புதிய முயற்சியினை மேற்கொள்ள சிறிது காலம் காத்திருக்கவேண்டியது அவசியம்.
பரிகாரம் : தினமும் பூஜையறையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்லி வாருங்கள்.

திருவாதிரை : நிதானமே நிம்மதிக்கு வழி

பொது : அஷ்டம ஸ்தானத்தில் வந்து அமரும் குருவினால் பல்வேறு வழிகளில் தடையினை எதிர்கொள்வீர்கள். நட்சத்திர அதிபதி ராகுவும் 12ல் நீசம் பெறுவதால் அவ்வப்போது செய்வதறியாது தடுமாற நேரிடும். ராசிநாதன் புதனின் சஞ்சார நிலையில் உண்டாகும் மாற்றம் மட்டுமே உங்களைக் காக்கும். வரும் ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உங்கள் நலம்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது.

நிதி : சிரமமான சூழல் நிலவுவதால் நிதி நிலையில் பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. சொத்து சேர்க்கும் முயற்சியில் தடை உண்டாகக் காண்பீர்கள். கடன் பிரச்னைகள் தலையெடுக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சிறப்பு கவனம் தேவை. யாரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

குடும்பம் : வெளியில் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக உண்டாகும் கோபத்தினை குடும்பத்தினரிடம் காட்டுவதால் அவர்களது வெறுப்பிற்கு ஆளாகலாம். குடும்பத்தினரின் தேவைகளை உணர்ந்து செயல்படும் நீங்கள் அவர்களது மனநிலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் அவ்வப்போது வீண் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் குறித்த நேரத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

கல்வி : மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேர்வின் போது விடைகளை தெளிவாக எழுத வேண்டியது அவசியம். அவசர அவசரசமாக எழுதும் எழுத்துக்கள் விடைகளை திருத்தும் ஆசிரியருக்குப் புரியாமல் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உண்டு. நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கணிதவியல், கணிப்பொறி அறிவியல் பாடங்களைச் சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : கணவருடன் உண்டாகும் கருத்து வேறுபாட்டினை வளர விடாமல் உடனுக்குடன் அமைதியாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நேரம் சரியாக இல்லை என்பதை உணர்ந்து அடுத்தவர்கள் பிரச்னையில் தலையிடாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களுக்கு சொல்லும் அறிவுரைகள் உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். எதிர் வரும் ஒரு வருட காலத்தில் பேசாமல் அமைதியாக இருந்தாலே பல்வேறு சிக்கல்களும் தீர்ந்துவிடும்.

உடல்நிலை : உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை என்பதை இந்த குருப்பெயர்ச்சி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்து பார்த்தல் அவசியம். உணவுக்கட்டுப்பாடு ஒன்றுதான் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்தாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும் வீட்டு உணவினை மட்டும் உட்கொள்ளுங்கள். தலைவலி, மைக்ரேன், பித்தம் போன்ற பிரச்னைகளால் சற்று சிரமம் காண்பீர்கள்.

தொழில் : பொறமைக்காரர்களால் சிரமங்களை சந்திக்க உள்ளீர்கள். உங்களுடன் இருப்பவர்களில் ஒரு சிலர் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காது  வேண்டுமென்றே உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்க முயற்சிப்பார்கள். தொழில்முறையில் யாரிடமும் உங்கள் எதிர்ப்பினைக் காட்டாதீர்கள். நேரம் சரியாக இல்லை என்பதை உணர்ந்து அமைதியாக செல்லுங்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிக்கும் கீழ்நிலைப் பணியாளர்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிப்பார்கள். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதைக் கொண்டு சமாளித்து வருவது நல்லது.

பரிகாரம் : விநாயகப்பெருமானை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் : வீண்பேச்சால் அவப்பெயர் வரலாம் 40/100

பொது : நட்சத்திர அதிபதி ஆகிய குரு எட்டில் வந்து அமர்வதால் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும் முதலில் தடையையும், அதன் பிறகு ராசிநாதன் புதனின் புத்தி சாதுர்யத்தால் தடையைத் தாண்டி வெற்றியையும் கண்டு வருவீர்கள். தன்னம்பிக்கை என்ற பெயரில் அளவுக்கதிகமாக சுமையை ஏற்றிக்கொண்டு தள்ளாடுவீர்கள். குருவின் நீச பலமும், எட்டாம் இடத்து அமர்வும் அதிக சிரமத்தைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு எந்த ஒரு விஷயத்தையும் இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொண்டால் சமாளித்து வெற்றி பெய இயலும்.

நிதி : சிக்கன முயற்சிகள் ஓரளவிற்கு பலன் தந்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகள் உங்கள் கையிருப்பினைக் கரைக்கும். எந்த ரூபத்தில் இருந்து செலவு வருகிறது என்பதை கணிக்க இயலாமல் தடுமாறுவீர்கள். தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் செலவினை சமாளிக்கும் வகையில் வரவு நிலை இருக்கும். சேமிக்கும் முயற்சியில் வெற்றி காண மிகுந்த போராட்டத்தை சந்திப்பீர்கள். ஷேர்மார்க்கெட் போன்ற ரிஸ்க்கான துறையில் முதலீடு செய்ய ஏதுவான நேரம் இதுவல்ல. வங்கி சார்ந்த சேமிப்புகள் பயன் தரும்.
குடும்பம் : குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் கோபத்தினை அவர்கள் மீது காண்பித்தாலும் உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் வழியில் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை.

கல்வி : வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.  அதே நேரத்தில் விடாமுயற்சி என்பது கட்டாயமாகிறது. ஆசிரியர்களிடம் நன்மதிப்பினைப் பெறுவதன் மூலம் கல்வி நிலையில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண இயலும். வணிகவியல் மற்றும் மொழிப்பாடங்களில் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் : தேவையில்லாத வீண் பேச்சுக்கள் உங்களுக்கு அவப்பெயரைத் தரக்கூடும். நீங்கள் நல்லது என்று நினைத்து பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. தம்பதியருக்கிடையே அவ்வப்போது வீண் வாக்குவாதம் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிரச்னையின் போது அமைதியாக இருப்பது மட்டுமே வெற்றியைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

உடல்நிலை : கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் நோய்தொற்றிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுமுறையையும், கஷாயம் முதலானவற்றையும் உட்கொள்வது நல்லது.

தொழில் : குருவின் எட்டாம் இடத்து அமர்வினால் தொழில்முறையில் மந்தமான சூழலை உணர்வீர்கள். ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை குருவின் அதிசார அமர்வினால் திடீர் முன்னேற்றம் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சியில் ஈடுபட மேற்சொன்ன காலம் பயனுள்ளதாய் அமையும். நீதித்துறை, கல்வித்துறை, வணிகவியல் துறை பணியாளர்கள் சற்று சோதனைக்கு உள்ளாவார்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் அடுத்தவர்களை நம்பாது நேரடியாக களப்பணி ஆற்றினால் மட்டுமே வெற்றி காண இயலும்.

பரிகாரம் : வியாழன்தோறும் விரதமிருந்து வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து குரு பகவானை வழிபட்டு வர பிரச்னைகள் தீர்வடையும்.

கடகம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

புனர்பூசம் 4ம் பாதம் : குரு பார்க்க கோடி நன்மை   75/100

பொது : ராகு,கேதுப் பெயர்ச்சியினால் சாதகமான பலன்களை அனுபவித்து வரும் உங்களுக்கு வரவிருக்கும் குருப்பெயர்ச்சி மேலும் வலிமை சேர்க்கும். குருவின் நேரடி பார்வை உங்கள் செயல்களில் இருந்து வரும் தடுமாற்றத்தைப் போக்கி செயல்வெற்றியை உறுதி செய்யும். நட்சத்திர அதிபதி குருவின் அனுக்ரஹமும் ராசி அதிபதி சந்திரனின் அவ்வப்போதைய சாதகமான சஞ்சார நிலையும் உங்களுக்கு தொடர்வெற்றியைத் தந்து கொண்டிருக்கும். இதுநாள் வரை பொறுமையாய் காத்திருந்ததற்கான பலனை தற்போது அனுபவிக்க உள்ளீர்கள்.

நிதி : ராகுவின் சாதகமான அமர்வு நிலை சிறப்பான தனலாபத்தினைத் தந்துகொண்டிருக்கும். குருவின் பார்வை பலமும் இணைவதால் செலவுகள் குறைந்து சேமிப்பு உயர்வடையும். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் அரசுத் தரப்பு நிறுவனங்களில் டெபாசிட் செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பினை உறுதி செய்துகொள்வீர்கள். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு கிடைக்கும் தனலாபத்தில் ஒரு பகுதியை தான தர்மங்களுக்கு செலவழிக்க முற்படுவீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்புகள் தீர்ந்து அமைதி நிலவும் என்பதை குருவின் பார்வைநிலை உறுதி செய்கிறது. பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்து குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நற்பெயர் காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் இது. உறவினர்களால் உண்டான மனக்கசப்பு நீங்கும். பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கல்வி : மாணவர்கள் ஆசிரியர்களின் துணையுடன் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். கணிதம், மொழிப்பாடங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சித்துறை மாணவர்கள் தங்கள் கைடுகளின் துணையுடன் ஆய்வுப்படிப்பினை விரைவாக முடித்து பட்டம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் உங்களுக்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வீர்கள். வீட்டில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார்கள். கணவரின் வழியில் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் குறைவின்றி கிடைத்து வரும்.  முக்கியமான நேரத்தில் உங்கள் பேச்சும் செயலும் வெற்றியைப் பெற்றுத் தருவதால் குடும்பத்தினரிடையே பெரும் மதிப்பினைப் பெறுவீர்கள்.

உடல்நிலை : குருவின் பார்வை பலம் உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும். என்றாலும் இடையே உண்டாகும் குருவின் ஐந்து மாத கால அதிசாரம் சற்று சிரமத்தைத் தரக்கூடும். 05.04.2021 முதல் 14.09.2021 வரை உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். குளியலறை, கழிவறை ஆகியவற்றை பயன்படுத்தும்போது நிதானமாக அடியெடுத்து வைப்பது நல்லது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஓரளவிற்கு வலி குறைந்திருக்கக் காண்பார்கள்.

தொழில் : ராகுவின் சாதகமான அமர்வு நிலையோடு குருவின் பார்வை பலமும் இணைவதால் தொழில்முறையில் சிறப்பான நேரத்தினைக் காண்பீர்கள். அந்நிய தேசம் சார்ந்த பணிகள் வெற்றி தரும். அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். சுயதொழில் செய்பவர்கள் வெற்றி கண்டு வருவார்கள். சிறிய அளவிலான முதலீட்டுடன் கூடிய தொழில்கள் பெருத்த லாபத்தினைப் பெற்றுத் தரும். உண்மையான உழைப்பும் செய்தொழிலில் நேர்மையும் உங்களைத் தனித்துக் காட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பதோடு பதவி உயர்வினையும் பெறுவார்கள்.

பரிகாரம் : மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள்.

பூசம் : நிதிநிலை மனநிறைவு தரும் 70/100

பொது : குருவின் நேரடிப் பார்வையின் மூலம் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாகக் காத்திருந்த வாய்ப்பு ஒன்று கையில் கிடைக்கக் காண்பீர்கள். காலநேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு தயங்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ராசியின் அதிபதி சந்திரன் சாதகமாக சஞ்சரித்தாலும் நட்சத்திர அதிபதி சனியால் அவ்வப்போது மனதின் மூலையில் வீணான சந்தேகத்திற்கு இடமளித்து வருகிறீர்கள். தேவையற்ற சந்தேகத்தால் உங்கள் செயல்வேகம் தளர்வதோடு வெற்றிக்கான காலமும் தாமதப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். குருவின் துணை இருப்பதால் நாம் சரியான பாதையில்தான் பயணித்து வருகிறோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம்.
நிதி : கிரஹங்களின் சஞ்சாரப்படி தற்போது நிதி நிலை நன்றாகவே உள்ளது. கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனைப் பெற்றுத் தரும். நிலுவையில் உள்ள பாக்கித்தொகைள் வசூலாகும். நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு சேமிப்பினை உயர்த்திக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்து வாங்க முற்படுவீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பனிப்போர் உங்கள் தனிப்பட்ட முயற்சியால் முடிவிற்கு வரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்து வரும் கருத்து வேறுபாட்டினை போக்கும் முயற்சியில் கவுரவம் பாராமல் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தேடித் தரும் வகையில் அமையும். உறவினர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிம்மதி காண்பீர்கள். உடன்பிறந்தோ£ர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் காண்பீர்கள்.

கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மனப்பாடத் திறன் கூடும். எழுத்துப்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். போட்டியாக நீங்கள் நினைக்கும் மாணவர்களும் உங்களுடன் நட்புறவு கொண்டு ஆதரவாக செயல்படுவார்கள்.

பெண்கள் : நேரம் நன்றாக இருந்தாலும் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. நீங்கள் கறாராக பேசும் வார்த்தைகள் உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பினை உண்டாக்கக் கூடும். இதனால் வீண்வம்பு விவகாரங்கள் உருவாகக் கூடும். பிரச்னைக்கு உரிய நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காத்து வாருங்கள். நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிரிகள் குறைந்த கால அளவிற்குள் காணாமல் போய்விடுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தினை உருவாக்கும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது.
உடல்நிலை : குருவின் பார்வையுடன் ஆரோக்யத்தை சரிவர பராமரிப்பீர்கள். என்றாலும் கால்சியம் குறைபாடு, எலும்பு மஜ்ஜைகளில் தேய்மானம் போன்ற பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். மனதில் இருக்கும் வலிமை உடலில் இல்லாதது போல் உணர்வீர்கள். இரவினில் பசும்பால் தினமும் அருந்தி வருவதன் மூலம் உடல்நலத்தை பேணிக்காக்க இயலும்.

தொழில் : நீதி, நேர்மை, நாணயம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு அலுவலகத்தில் நற்பெயர் காண்பீர்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் கூடுவதால் பணிச்சுமையும் அதிகரிக்கக் காண்பீர்கள். பெயர், புகழுக்காக பணியாற்றுபவர்கள் நீங்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலதிகாரிகள் தங்கள் பணிகளையும் உங்கள் மீது சுமத்துவார்கள். என்றாலும் எல்லாப் பொறுப்புகளையும் அழகாக குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து பதவி உயர்வினைக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோருக்கு கால நேரம் சாதகமாக உள்ளது. விவசாயம், உணவு சார்ந்த தொழில்கள், தையல்துறை, ஜவுளித்துறை சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள் நல்லதொரு தனலாபத்தினைக் காண்பார்கள்.

பரிகாரம் : மனநிம்மதி வேண்டி தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வருவது நல்லது.

ஆயில்யம்: வாகன வாங்கும் யோகம் 75/100

பொது : இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களது தனித்திறமை வெளிப்பட்டு பெயரும் புகழும் அடைவீர்கள். ராசிநாதன் சந்திரனின் துணையால் அன்புடனும், நட்சத்திர அதிபதி புதனின் துணையால் புத்தி கூர்மையுடனும் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். ஐந்தாம் இடத்து கேது அவ்வப்போது சிறிது மனக்குழப்பத்தை தந்தாலும் அதிலிருந்து விடுபட குருவின் பார்வை துணையிருக்கும். ஆத்ம ஞானம் என்பது கூடும். சிந்தனையில் இருந்து வரும் கேள்விகளுக்கு உரிய விடை கிடைக்கக் காண்பீர்கள். செயல்களில் இருந்து வந்த தடுமாற்றம் என்பது காணாமல் போய் ஆணித்தரமாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள்.
நிதி : ராகுவின் துணையால் உங்கள் நிதி நிலை நன்றாக உயர்வடையும். குருவின் பார்வை பலமும் இணைவதால் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வந்து சேமிப்பு உயரும். புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. வண்டி வாகனங்களை புதிதாக வாங்க நினைப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வங்கி சார்ந்த கடனுதவி தடையின்றி கிடைக்கும். அதே நேரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. உள்நாட்டு முதலீடு என்பது வெற்றியைப் பெற்றுத் தரும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றி வைக்கும் நீங்கள் அவர்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்க இயலாது. பெற்றோர்களிடம் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பித்ரு கர்மா, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை தடையின்றி செய்திட கால நேரம் சாதகமாக அமையும். தம்பதியராக இணைந்து செயல்பட்டு சுபநிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவீர்கள். உடன்பிறந்தோர் பக்கபலமாகத் துணையிருப்பார்கள்.

கல்வி : வித்யாகாரகன் புதனின் சாரத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியின் காலத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பான உயர்வினைக் காணும். வேதியியல், வானவியல் சார்ந்த ஆராய்சி படிப்பில் இருக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சியில் சிறப்பான வெற்றியைக் காண்பதோடு அரசுத் தரப்பிலிருந்து விருதினையும் பெறுவார்கள்.  பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி காண்பதோடு விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள்.
பெண்கள் : பொறுப்புகளைச் சுமக்கும் நீங்கள் பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் வீட்டில் உள்ளோரின் மனதினைப் புண்படுத்தக் கூடும். பிள்ளைகள் செய்யும் தவறுகளை தனிமையில் சுட்டிக்காட்டுங்கள். கணவரின் வெற்றியில் முக்கியப் பங்காற்றுவதோடு சரிபாதி உரிமையையும் பெற்று உங்கள் தனித்துவத்தை நிலைநாட்டுவீர்கள்.

உடல்நிலை : தலைவலி, பித்தம் போன்ற பிரச்னைகளால் ஆரோக்யத்தில் சிறு தொந்தரவுகளைச் சந்தித்து வருவீர்கள். டென்ஷனைக் குறைத்துக் கொண்டாலே போதும், உடல் ஆரோக்யத்துடன் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையற்ற சிந்தனைகளும் அநாவசியமான கற்பனைகளும்தான் உங்களுக்கு எதிரிகள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். கவனக் குறைவின் காரணமாக சிறு பிரச்னைகளை சந்திக்க நேரும் என்பதால் வண்டி வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் அலுவலகத்தில் சுகமான சூழலைக் காண்பார்கள். கீழ்நிலைப் பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் என இரு தரப்பினரையும் அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வினைக் காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரித்தாலும் அவற்றை தானே தனியாக சுமக்காமல் மற்றவர்களிம் பிரித்துக் கொடுத்து வேலை வாங்கும் கலையை கற்றுக் கொள்வீர்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். மளிகை, பலசரக்கு, மொத்த வியாபாரம், தானியங்கள் கொள்முதல் செய்வோர் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள். நகைக்கடை, ஜவுளிக்கடை வைத்திருப்போர் தங்கள் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : வெங்கடேசப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

மகம் : குருபார்வையால் சுபநிகழ்ச்சி 60/100

பொது : கடந்த ஒரு வருட காலமாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். என்றாலும் ஆறாம் பாவத்தில் குருவின் அமர்வு நல்ல ஞானத்தைத் தரும். வேகம் நிறைந்த உங்களுக்கு நிதானத்தைக் கற்றுக்கொடுக்கும். மறைவில் இருந்து உங்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். கூட இருந்தே குழி பறித்து வந்தவர்களை விட்டு விலகுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை நிறைந்தவர்களை சமாளிப்பதில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிட வேண்டியிருக்கும். ஆன்மகாரகன் சூரியனை ராசிநாதனாகவும் ஞானகாரகன் கேதுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டிருக்கும் நீங்கள் தற்போது ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

நிதி : நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அதே நேரத்தில் புதிதாக கொடுக்கல்,வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்பு ஏற்கலாகாது. தன ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்பில் குறை உண்டாகாது. தொழில்முறையில் சம்பாதிக்கும் பணம் உபயோகமாய் அமையும். சொத்துச் சேர்க்கையில் ஈடுபடலாம்.

குடும்பம் : குடும்பத்தில் அமைதி நிலவும். குருவின் குடும்ப ஸ்தான பார்வை சுபநிகழ்ச்சிகளை நடத்த துணை புரியும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக தொலைதுாரத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவியாய் அமையும். நெருங்கிய உறவினர் உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதனால் உண்டாகும் குழப்பத்தினை அழகாக சமாளிப்பீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலையில் காணும் தேக்கத்தினைப் போக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். செய்முறை வகுப்பினில் ஆர்வம் கொள்ளும் நீங்கள் தியரி பாடங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. கணிதம், அறிவியல் பாடப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களிடம் நறபெயர் காண சற்று போராட வேண்டியிருக்கும். தேர்வின்பொழுது சகமாணவர் செய்யும் தவறு உங்களைப் பாதிக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

பெண்கள் : வீண் வம்பு விவகாரங்களால் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். குடும்பப் பிரச்னைகளில் கணவரின் உடன்பிறந்தோர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெரியவர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டு நற்பெயர் காண வேண்டியது அவசியம். பண விவகாரங்களில் தனித்துச் செயல்படாதீர்கள். மாற்று மொழி பேசும் நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
உடல்நிலை : குருவின் ஆறாம் இடத்து அமர்வு உடல்நிலையை சற்றே அசைத்துப் பார்க்கும். குறிப்பாக கல்லீரல், பித்தப்பை, தைராய்டு, ரத்த அழுத்தம் சார்ந்த ரோகங்கள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. உணவினில் எண்ணெய் பண்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோக ரீதியாக முன்னேற்றத்தைத் தரும். ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம் தோன்றினாலும் அதற்குரிய கவுரவம் கிடைக்கக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்க முயற்சிப்பர். தொழிலதிபர்கள் அதிகளவில் முதலீடு செய்யும்போது நிதானத்துடன் செயல்படவும். வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெறும். வெளிநாட்டில் பணிபுரிவோர் சிக்கலான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

பூரம் : சொந்த வீடு கட்டும் யோகம் 55/100

பொது : கடந்த ஒரு வருடமாக ஆட்சி பலம் பெற்றிருந்த குரு தற்போது நீச பலம் பெற உள்ளதால் உங்களுக்கு பெருத்த பாதிப்பு ஏதும் இராது. தனகாரகன் சுக்ரனை நட்சத்திர அதிபதியாகவும் சூரியனை ராசி அதிபதியாகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு குருவின் ஆறாம் இடத்துப் பெயர்ச்சி என்பது துரோகிகளை அடையாளம் காட்டும். நீங்கள் நல்லவர் என்று நம்பியிருந்த நபர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவது கண்டு மனம் வருந்துவீர்கள். எனினும் மிகுந்த மன வலிமை உடையவர் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில நேரத்தில் உண்டாகும் நம்பிக்கையின்மை காரணமாக உடனிருப்போர் மீது கோபம் உண்டாகலாம்.

நிதி : ராகுவுடன் சுக்ரன் சேரும் காலத்தில் நிதி நிலை நன்றாக உயர்வடையக் காண்பீர்கள். தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வையும் விழுவதால் சம்பாதிக்கும் பணம் அசையாச் சொத்தாக உருவெடுக்கும். சொந்த வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் பொருளிழப்பினை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. ஆடம்பர செலவிற்கான வாய்ப்பு உண்டு.

குடும்பம் : குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவர். குடும்பத்தினரின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினை குரு உண்டாக்கித் தருவார். பெண் குழந்தைகளை அனுசரணையோடு வளர்க்க வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
கல்வி : மாணவர்கள் சற்று போராடி வெற்றி காண வேண்டியிருக்கும். உயர்கல்வியில் எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சார்ந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் தங்கள் திறமையின் மூலம் வளர்ச்சி அடைவார்கள். விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் உடல்தகுதியினை நிரூபிப்பதில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரலாம்.
பெண்கள் : குடும்பப் பொறுப்புகளில் உங்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறும். தனித்துவமான செயல்பாடுகள் உறவினர் மத்தியில் சற்று அவப்பெயரைத் தந்தாலும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றி வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ரத்தசோகை, உடல் அசதி போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு.

உடல்நிலை : ரோக ஸ்தானத்தில் வந்து அமர உள்ள குருவினால் உடல்நிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவை உங்கள் உடல்நிலையை பேணிக்காக்க துணை நிற்கும்.
தொழில் : உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரனின் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதாலும், நீசம் பெற்ற குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்தின் மீது விழுவதாலும் தொழில் முறையில் சிறப்பான தன லாபத்தினைக் கண்டு வருவீர்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் தனித்திறமையின் மூலம் நல்ல வளர்ச்சியினைக் காண்பர். தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். புதிய பங்குதாரர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உண்டு. ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, செல்போன் வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். தொழில் முறையில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரிதும் நன்மையைத் தரும்.

பரிகாரம் : வெள்ளி தோறும கோபூஜை செய்து வழிபட்டு வரவும்.

உத்திரம் 1ம் பாதம் : அரசு வகையில் நன்மை 60/100

பொது : குருவின் ஆறாம் பாவக சஞ்சாரம் உங்களுக்கு சற்று சிரமத்தினைத் தரக்கூடும். மனநிலையில் நம்பிக்கையை இழந்தது போல் உணர்வீர்கள். ராசிநாதன் மற்றும் நட்சத்திரநாதன் ஆகிய இரண்டு பொறுப்பினையும் சுமக்கும் சூரியன் பலம் பெறும் நேரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் பணிகளைச் செய்து முடிக்க இரவு நேரத்தினை விட பகல் நேரமே உசிதமாக அமையும். முக்கியமான பணிகளை பகல்பொழுதிற்குள்ளாக செய்து முடிப்பது நன்மை தரும். 06.01.2021 வரை குரு சூரியனின் நட்சத்திரக்காலில் சஞ்சரிப்பதால் அதுவரை உங்கள் செயல்திட்டங்களில் தடையில்லா வெற்றியைக் கண்டு வருவீர்கள்.

நிதி : கவுரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற பொருள் வரவு இருந்து வரும். சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்தல் கூடாது. போட்டி, பந்தயம் கட்டுதல், சூதாட்டம் ஆகியவற்றில் இருந்து விலகியே இருப்பது நல்லது.
குடும்பம் : குடும்ப உறுப்பினர்களோடு உங்களின் பிடிவாத குணத்தினால் வீண் கருத்து வேறுபாடு அவ்வப்போது உருவாகும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் குணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடும். நெருங்கிய சொந்தம் ஒன்று உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பரஸ்பரம் உருவாகலாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

கல்வி : சகமாணவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சற்றே சிரமம் காண்பர். அறிவியல் பாடங்கள் சரிவர புரியாமல் ஆசிரியர் மேல் பழி சொல்வீர்கள். மனப்பாடத்திறன் குறைவதாக எண்ணுவீர்கள். குருட்டு மனப்பாடம் செய்வதைவிட பாடங்களை புரிந்து படிப்பது நல்லது. குருவின் ஆறாம் இடத்துச் சஞ்சாரம் உங்களை சற்றே சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பதால் தேர்வு நேரத்தில் சிறப்பு கவனம் தேவை.

பெண்கள் : முன்கோபத்தினைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அவசரப்பட்டு பேசும் கோபம் நிறைந்த வார்த்தைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக அமையும். உங்கள் செயலை நியாயப்படுத்திப் பேச முற்படுவீர்கள். பிறந்த வீட்டுப் பெருமையை புகுந்த வீட்டில் பேசப்போய் சங்கடத்தினை சந்திக்க நேரிடும். கணவர் வழி உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

உடல்நிலை : ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பெண்கள் தங்களின் ஆரோக்யத்தை சரிவர பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். கழுத்துவலி, தோள்வலி, முதுகு வலி, உடல் அசதி ஆகியவற்றால் அவ்வப்போது அவதிப்படுவீர்கள். இதனால் உங்கள் செயல்வேகம் குறைவதாக உணர்வீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தொழில் : தொழில்முறையில் சிறப்பான பலம் உண்டாவதைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்புகள் உயரக் காண்பார்கள். அரசுத்தரப்பில் வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பெருநிலக்கிழார்கள், நிலச்சுவான்தாரர்கள் ஆகியோர் தங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவார்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் முழுமுயற்சியின் மூலம் வெற்றி பெற்றுவருவார்கள். தொழிலதிபர்கள் அரசுத்தரப்பு உதவியின் மூலம் தங்கள் நிறுவனத்தை வலுப்படுத்திக் கொள்வார்கள். குருவின் பார்வைபலமும், ராகுவின் அமர்வும் தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்களைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.

பரிகாரம் : தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

கன்னி : குரு பெயர்ச்சி 2020 – 2021

உத்திரம் 2, 3 4ம் பாதம் : அதிர்ஷ்ட வாய்ப்பு 75/100

பொது : ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். ராசிநாதன் ஆக புதனையும் நட்சத்திரநாதனாக சூரியனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
நிதி : அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் உங்கள் நிதிநிலை உயர்வடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பாக்ய ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் பேராசைக்கு இடமளிக்காமல் தேவையானவற்றை மட்டும் அடைவதில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டினில் ஆடம்பரப் பொருட்கள் சேரும் நேரம் இது.

குடும்பம் : மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம் ஒன்று உங்கள் பந்தத்தை நாடி வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக் கோட்டைவிடும் வாய்ப்பு உண்டு. மொழிப்பிரிவு பாடங்களில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்.

பெண்கள் : குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எளிதில் ஏமாறும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் கணவர் மற்றும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.

உடல்நிலை : முகத்திலும், உடலிலும் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றலாம். ஒரு சிலர் கணுக்கால் வலியால் அவதிப்படுவர்.  காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஒரு சில பிரச்னைகள் தோன்றலாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதை உண்டு என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இரும்புச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.

தொழில் : உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தினைக் காண்பர். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பரிகாரம் : பூவராஹ ஸ்வாமியை வழிபட்டு வரவும்.

அஸ்தம் : குடும்ப வாழ்வில் குதுாகலம் 70/100

பொது : ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகவும், புதனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்கள் மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் உண்டாகக் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும்.
நிதி : நேரம் நன்றாக இருப்பதால் சேமிப்பினை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புதிய சொத்து வாங்கும்போது கண்திருஷ்டி கருதி வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடு முதலான அசையாச் சொத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நிதி உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். பிள்ளைகளின் பெயரில் சேமிப்பினைத் துவக்க கால நேரம் சாதகமாக அமைந்துள்ளது.

குடும்பம் : குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் குதுாகலம் நிலவி வரும். ஐந்தாம் இடத்தில் வந்து அமர உள்ள குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த நேரத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

கல்வி : மாணவர்கள் அவ்வப்போது ஞாபகமறதியால் சிறு சங்கடத்தை சந்திப்பர். பாடங்களைப் புரிந்து படித்தீர்களேயானால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. 06.01.2021 முதல் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகக் காண்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவோடு கஷ்டமான அறிவியல் சமன்பாடுகளையும் எளிதாகப் புரிந்துகொள்வீர்கள். 2021ல் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கைளப் பெறுவதற்கு குரு துணையிருப்பார்.

பெண்கள் : குடும்பப் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவரின் உதவியோடு வெற்றி கண்டு வருவீர்கள். பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதில் மன நிம்மதி காண்பீர்கள். குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்கும்போது மன வருத்தம் கொள்வீர்கள். சென்ட்டிமெண்ட் உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவது உங்கள் பலவீனமாய் அமைகிறது.
உடல்நிலை : குருவின் பார்வை பலத்தினால் தேக உடல்நிலை நல்ல முறையில் இருந்து வரும். எனினும் ரத்த சோகை, உடல் அசதி ஆகியவற்றைத் தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மூன்றாம் இடத்து கேதுவினால் நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் தோன்றலாம். வெந்நீரை மட்டும் பருகி வருவது நல்லது.
தொழில் : தொழில்முறையில் அனுசரணையான அணுகுமுறை உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவதால் அலுவலகத்தில் நிம்மதியான சூழலை உணர்வீர்கள். மளிகை, உணவுப்பொருள் வியாபாரம், காய்கறி, பழம் வியாபாரம் செய்பவர்கள், விவசாயிகள் ஏற்றம் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணும் நேரமாக அமையும்.

பரிகாரம் : தினமும் காலையில் துளசிச் செடிக்கு நீருற்றி வணங்கி வரவும்.

சித்திரை 1, 2ம் பாதம் : குருபார்வையால் வெற்றி 75/100

பொது : சுக ஸ்தான அதிபதி ஆகிய குரு ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஒரு வருட காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டு குழுவாக செயல்படுவீர்கள். பொதுநலச்சேவையில் அதிக ஈடுபாடு உண்டாகும். அர்த்தாஷ்டமச் சனியால் கண்டு வரும் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும். மனதில் சந்தோஷம் குடிபுகும். நட்சத்திர அதிபதி ஆகிய செவ்வாயின் வேகமும், ராசி அதிபதி ஆகிய புதனின் விவேகமும் இணையப்பெற்ற உங்களுக்கு குருவின் அருட்பார்வையும் கிடைப்பதால் வெற்றி தரும் காலமாக அமைந்திருக்கிறது.

நிதி : செவ்வாயின் அனுக்ரஹத்தைப் பெற்றிருக்கும் உங்களுக்கு பூமி லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆர்வம் உள்ளவர்கள் விவசாய நிலங்களில் முதலீடு செய்வதற்கான நேரம் கூடி வரும். அசையாச் சொத்துக்களில் செய்யும் முதலீடு உங்கள் பரம்பரைக்கே உதவியாய் அமையும். ஷேர்மார்க்கெட், ம்யூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளும் உங்களுக்கு லாபத்தினைப் பெற்றுத் தரும்.

குடும்பம் : குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமைப்படத்தக்க வகையில் அமையும். உடன்பிறந்தோர் வகையில் மனவருந்தும் சம்பவங்கள் நிகழும் வாய்ப்பு உண்டு.

கல்வி : குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் மாணவர்களின் அறிவுத்திறன் உயர்வடையும். ஆயினும் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம்பிடிக்க பிறந்த ஊரிலிருந்து தொலைதுாரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அயல்நாட்டுப் படிப்பிற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். மெக்கானிகல், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரிகல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற தொழிற்கல்வி சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : கணவருடன் இணைந்து செயல்பட்டு பல்வேறு குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். புகுந்த வீட்டில் துரோகம் செய்யும் உறவினர் ஒருவரின் உண்மையான முகத்தினை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களுக்கு பக்கபலமாய் துணைநிற்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தையும் அலுவல் பொறுப்பையும் சரியான அளவில் சமாளித்து வெற்றி காண்பர்.

உடல்நிலை : உடல் உஷ்ணத்தின் காரணமாக உடலில் ஆங்காங்கே சருமத்தில் மாறுபாடு உண்டாகலாம். உணவினில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது நல்லது. நல்லெண்ணெய் உட்கொள்வது உடல் ஆரோக்யத்தை கட்டிக்காக்கும்.

தொழில் : குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் வருகின்ற ஒரு வருட காலத்திற்கு சீரான தனலாபம் அடைவார்கள்.
பரிகாரம் : ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள்.

துலாம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

சித்திரை 3, 4ம் பாதம் : ஆன்மிக நாட்டம் கூடும்  55/100

பொது : கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருபகவானின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் சுக்ரனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஓரளவிற்கு நன்மையைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

நிதி : ராகு,கேதுவின் அமர்வு நிலையால் அதிக விரயத்தினைக் காணும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிதிநிலையில் சற்று நிம்மதியைத் தரும். ராகுவின் மீது விழும் குரு பார்வையால் அநாவசிய செலவுகள் குறையும். உங்களைச் சார்ந்து இருப்பவர்களின் பெயரில் சொத்துக்கள் சேரும். மனைவி, குழந்தைகள் பெயரில் வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது.

குடும்பம் : குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பு லேசான மன வருத்தத்தைத் தரும், குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டு உழைத்து வருவீர்கள். பேரப்பிள்ளைகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறக் காண்பீர்கள். கோபத்தில் பேசும் வார்த்தைகளால் குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்து வாருங்கள்.

கல்வி : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

பெண்கள் : குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிவிடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும் விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை செவ்வாய்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும்.
உடல்நிலை : நீண்டநாள் தொந்தரவுகள் முடிவிற்கு வரும். எண்ணெயினால் ஆன தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதால் உடல்நிலை பாதிக்கப்படலாம். மருந்தினால் அலர்ஜி உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உங்கள் உடல்நிலையைப் பொறுத்த வரை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை நாடுவது நன்மை தரும். புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்யத்தை சீராக வைத்திருக்கும்.

தொழில் : ஜீவனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை குருபகவான் நிச்சயம் தருவார்.

பரிகாரம் : வாராஹி அம்மனை வழிபட்டு வாருங்கள்.

சுவாதி : சுபச்செலவுகள் அதிகரிக்கும் 50/100

பொது : சுக ஸ்தானத்தில் குருவின் வரவினால் சற்று சௌகரியமாக உணர்வீர்கள். உங்கள் கருத்துக்கள் சுற்றியுள்ளோர் மனதினில் தாக்கத்தினை உண்டாக்கும். பேச்சினில் தடுமாற்றத்தை உணர நேரிடும். முக்கியமான விவாதங்களுக்குச் செல்வதற்கு முன்னால் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் நட்சத்திர அதிபதி ராகு எட்டில் சஞ்சரிப்பதால் சில நேரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு வருத்தம் கொள்வீர்கள். நிதானத்தை இழக்காமல் பொறுமையாக கவனித்துப் பாருங்கள். ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடப்பது போல் தோன்றினாலும் இறுதியில் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள்.

நிதி : வரவினை விட செலவுகள் கூடுதலாக அமைந்திருக்கிறது. என்றாலும் விரய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் சுபசெலவுகளாக அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். ஜனன ஜாதகத்தில் குரு, சுக்ரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்கள் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
குடும்பம் : குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக உழைத்து வருவீர்கள். அதே நேரத்தில் அவர்கள் தரப்பிலிருந்து பிரதிபலன் எதிர்பார்க்க இயலாது. உறவினர்கள் வழியில் சங்கடத்தினை சந்திக்க நேரிடும். நெருக்கமானவர்கள் கூட விலகிச் செல்லும் வாய்ப்பு உண்டு. முன்னோர்கள் பற்றிய சிந்தனை கூடும். பேரன்கள், பேத்திகளின் நடவடிக்கைகளில் முன்னேர்களின் சாயலைக் கண்டு பெருமை கொள்வீர்கள்.

கல்வி : மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் காண்பார்கள், தேர்வு நேரத்தில் கவனக்குறைவால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. வித்யா ஸ்தானத்தில் குரு நீசம் பெறுவதால் ஆசிரியரின் ஆதரவைப் பெற போராட வேண்டியிருக்கும். உயர்கல்வி மாணவர்கள் சற்று தடுமாற்றமான சூழலை உணர்ந்து வருவார்கள். மெரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் துறை மாணவர்கள் ஏற்றம் காண்பர்.

பெண்கள் : முன்பின் தெரியாத நபர்களிடம் பேசும்போது சிறப்பு கவனம் தேவை. வீண்வம்பு விவகாரங்கள் வந்து சேரலாம் என்பதால் அதிகம் பேசாமல் அமைதி காத்து வருவது நல்லது. சமூக வலை தளங்களை உபயோகப்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருந்து வாருங்கள். நண்பர்களாக நீங்கள் எண்ணி இருந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உண்டு.
உடல்நிலை : உடலில் உங்களையும் அறியாமல் சோம்பல்தன்மை குடிகொள்ளும். எப்பொழுதும் போல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தால் மட்டுமே ஆரோக்யத்தைக் காக்க இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகப்படியான டென்ஷன் என்பதும் உங்கள் உடல்நலத்தை சோதனைக்கு உள்ளாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் உங்கள் மனநிலையையும் உடல்நிலையையும் சீராக வைத்திருக்க உதவும்.

தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோகத்தில் உங்களை சிறப்பாக செயல்படவைக்கும். பொறுப்புகளை அதிகளவில் சுமந்து வருவீர்கள். எத்தனை சிறப்பாக செயல்பட்டாலும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் என்பது பெயரளவில்தான் இருந்து வருமே தவிர பெருத்த ஆதாயம் காண இயலாது. வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் அதிகளவிலான ட்ரான்ஸாக்ஷன்ஸ் செய்வது போல் தோன்றினாலும் லாபம் குறைவதாக உணர்வீர்கள். தொழிலதிபர்கள் கீழ்நிலைப் பணியாளர்களால் உண்டாகும் பிரச்னைகளை சமாளிப்பதில் சற்று சிரமம் கண்டு வருவார்கள். அந்நியம் தேசம் சார்ந்த முதலீடுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. விவசாயிகள் சாதகமான சூழலைக் கண்டு வருவார்கள்.
பரிகாரம் : அமாவாசை நாளில் அன்னதானம்.

விசாகம் 1, 2, 3ம் பாதம் : யாகாவாராயினும் நாகாக்க 55/100

பொது : குருவின் நான்காம் இடத்து அமர்வு நிலை உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நட்சத்திர அதிபதி ஆக குருவினையும் ராசிஅதிபதி ஆக சுக்ரனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த நேரத்தில் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்திருக்கும். உங்கள் உதவியை நாடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்வடையும். கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் மீது அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். அவ்வப்போது எதிர்பாராத பிரயாணங்களுக்கு ஆளாவீர்கள். மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்திவிடுவீர்கள்.

நிதி : நிதிநிலையில் ஏற்ற இறக்கமான சூழலைக் காண்பீர்கள். ராகு,கேதுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால் செலவுகள் அதிகமாகும். இருந்தாலும் குருவின் நான்காம் வீட்டு அமர்வு என்பது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் துாண்டும். புதிதாக வீடு, மனை வாங்க முனைபவர்கள் மூலப்பத்திரம், வில்லங்கம்  ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்து வேண்டியது அவசியம். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் நீங்களே நேரடியாக விசாரித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வங்கி டெப்பாசிட், இன்ஷ்யூரன்ஸ் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதே உங்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிள்ளைகளின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். அவர்களது செயல்பாடுகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவர் தனது வீட்டில் நடக்க உள்ள சுபநிகழ்விற்காக உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். உடன்பிறந்தோருடன் இணைந்து பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போட்டி என்று வரும்போது முன்னிலை பெறுவதில் தடையினை சந்திப்பீர்கள். இருந்தாலும் மனம் தளராமல் முடிந்தவரை முயற்சிப்பது நல்லது. ஒரு சிலருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்புகள் கைகூடி வரக்கூடும். தாவரவியல், கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், நர்சிங் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : யாகாவாராயினும் நாகாக்க என்பதை நினைவில் கொள்ளவும். பேசும்போது அதிக எச்சரிக்கை தேவை. உங்கள் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் பிரச்னைகள் உருவாகலாம். ஒரு சிலர் உங்களைத் துாண்டிவிட்டு பேசவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கணவருடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

உடல்நிலை : உடல்நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் தொந்தரவுகள் முடிவிற்கு வரக் காண்பீர்கள். கண் நோய், பல்வலி, மூட்டுவலி, நரம்பியில் சார்ந்த பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாயுத் தொந்தரவினால் அவ்வப்போது உடலில் தசைப்பிடிப்பினை உணர்வீர்கள்.
தொழில் : உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பதற்காக அடுத்தவர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். கீழ்நிலைப் பணியாளர்களிடம் எச்சரிக்கை தேவை. அலுவல் கோப்புகளைப் பராமரிப்பதில் நேரடி கவனம் அவசியம் தேவை. சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி செயல்பட நேரிடும். எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உணவுப் பண்ட வியாபாரம், காய்கறி, பழங்கள், குடிநீர், ஜுஸ், ஐஸ்கிரீம் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தை பலப்படுத்திக்கொள்ள காலநேரம் சாதகமாக அமையும்.

பரிகாரம் : அன்னபூரணியை வணங்கி வரவும்.

விருச்சிகம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

விசாகம் 4ம் பாதம் : முயற்சி திருவினையாக்கும்  60/100

பொது : குருப்பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். தனாதிபதியான குருபகவான் தன் வீட்டிலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். ராசிநாதனாக செவ்வாயையும் நட்சத்திர அதிபதியாக குருவையும் பெற்றிருப்பதால் நேர்மையும் வீரமும் உங்களது இரு கண்களாக விளங்கி வரும்.

நிதி : தனாதிபதி ஆகிய குருவின் இடமாற்ற நிலை சற்று தடுமாற்றத்தைத் தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வழியில் சுபவிரயத்தினை சந்திப்பீர்கள். ஆன்மிக செலவுகள் கூடும். சேமிப்பினை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் சிறப்பு கவனம் தேவை.

குடும்பம் : ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது வாழ்க்கைத் துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட்டால் பிரச்னைகள் விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
கல்வி : மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள். சட்டம், மருத்துவம் மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.

பெண்கள் : அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை செய்வதில் மனதிருப்தி காண்பீர்கள். அக்கம்பக்கத்து பெண்டிரோடு கொண்டிருக்கும் சுமூக உறவு தக்க சமயத்தில் உதவியாய் அமையும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது அவசியம்.

உடல்நிலை : உடல் ஆரோக்கியத்தில் உண்டாகும் மாற்றத்தினை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. இன்னதென அனுமானிக்கப்பட இயலாத புதிய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு முதலான பிரச்னைகளை சந்திப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம்.

தொழில் : கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றாமல் இருக்க கணக்கு வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். லேடி டாக்டர்கள் சாதனை படைப்பார்கள். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டுச் செல்வதோ, அல்லது அடுத்தவர்களின் வேலையை கூடுதலாகச் சுமப்பதோ கூடாது. பிறர் செய்யும் தவறு தொழில் முறையில் உங்களுக்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கலாம். அரசியல்வாதிகள் பல்வேறு சோதனைளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பரிகாரம் : மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருந்து வேல்வழிபாடு செய்து வருவது நல்லது.

அனுஷம் : நிதிநெருக்கடி உருவாகும் 55/100

பொது : குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்படுவீர்கள். ராசிநாதன் செவ்வாயின் வேகம் துணையிருந்தாலும் நட்சத்திரநாதன் ஆன சனியின் நிதானமும் உங்கள் செயலில் வெளிப்படுவதால் எவராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதவாறு உங்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
நிதி : நிதி நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் தொடர்ந்து மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும். ஒரு  நல்ல வருமானமும் மற்றொரு  சுமாரான வருமானமும் வருவதைக் காண்பீர்கள். எதிர்பார்க்கும் பணஉதவி கிடைத்துவிடும் என்று நம்பி ஒரு செயலில் இறங்க இயலாது. கையில் இருந்தால் தவிர தைரியமாக ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது தவித்து வருவீர்கள். குருவின் நீச பலத்துடன் கூடிய மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் தொடர்ந்து நிதி நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேச கால நேரம் அமையாது சிரமத்தை சந்தித்து வருவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை. நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சாதகமாகப் பேசப்போய் நட்பு வட்டத்தில் விரிசல் உண்டாகக் காண்பீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றினாலும் பெருத்த பிரச்னை ஏதும் இல்லை. குடும்பப் பெரியவர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வரும்.

கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் முன்னேற்றம் காண போராட வேண்டியிருக்கும். மனப்பாடம் செய்து படிப்பதை விட அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. எழுதும் திறன் நன்றாக உள்ளதால் அதன் மூலம் சாதிப்பீர்கள். மொழிப் பாடங்கள், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் : மனதில் எதையும் வைத்துக்கொள்ளாது வெளிப்படையாகப் பேசிவிட வேண்டியது அவசியம். வீணாக மனதில் வைத்துப் பூட்டிக்கொள்வதால் உடல்நிலையில் உபாதைகளை சந்திப்பீர்கள். தற்போதைய கிரஹ நிலையின்படி மனசஞ்சலம் என்பது பிரதானமான இடத்தினைப் பிடிக்கிறது. குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு பக்கத்துணையாக அமையும். அண்டை வீட்டாரோடு அன்பாகப் பழகி வருவீர்கள்.

உடல்நிலை : வண்டி வாகனங்களில் பயணிக்கும்போது சிறப்பு கவனம் தேவை. தசைப்பிடிப்பு, எலும்பு மஜ்ஜைகளில் பிரச்னை, கால்சியம் குறைபாடு ஆகியவற்றால் சற்றே சிரமம் உண்டாகும். ஒரு சிலருக்கு உடம்பினில் ஆங்காங்கே கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம். புகையிலை, பான்மசாலா போன்ற லாகிரி வஸ்துக்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையான அழுத்தத்தினை சந்திப்பார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க நேரிடும். அதே நேரத்தில் உடன் பணிசெய்வோரின் துணையுடன் உங்கள் பொறுப்புகளை சமாளித்து வெற்றி காண இயலும். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். மருந்துக்கடை, வேளாண்மை உரம், எரிபொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோரில் அழகு நிலையம், ரத்தப் பரிசோதனைக் கூடம், பிஸியோதெரபி முதலான துறையைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த மாற்றம் உண்டாகும். உழைப்பினால் உயர்வு காணும் காலமாக அமைந்திருக்கும்.

பரிகாரம் : குடும்ப புரோஹிதருக்கு வஸ்திர தானம் செய்யவும்.

கேட்டை : நண்பர்களால் உதவி 60/100

பொது : புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன்முயற்சியின் வலிமை கூடும். உங்கள் பெயரை உபயோகப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலனை அனுபவித்துவிடுவார்கள். உங்களது இயற்கை குணமான குறும்புத்தனமும், கலகலப்பும்  சற்று குறையும். ராசிநாதன் செவ்வாயின் வேகமும், நட்சத்திர நாதன் புதனின் விவேகமும் இணைந்து உங்கள் வெற்றிக்குப் பக்கபலமாய் துணைநிற்கும். அனுபவ அறிவினைப் பெறுவதால் அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள்.

நிதி : சேமிப்பில் ஒருவிதமான தேக்கநிலையினை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். பெரிதாக செலவு செய்யாதது போல் தோன்றினாலும் அவ்வப்போது செய்துவரும் சிறு சிறு செலவுகள் சேமிப்பில் தடையினை உண்டாக்கும். தாயார் வழி உறவினர் ஒருவருக்கு நிதியுதவி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்தில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமூகமாக முடிவடையும். வண்டி வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும்.

குடும்பம் : உடன்பிறந்தோருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய நேரிடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள இயலாமல் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். குடும்பப் பெரியவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சில நேரத்தில் குடும்பப் பிரச்னைகளுக்கு விடை காண்பதில் தடுமாற்றம் உண்டாகும்போது வாழ்க்கைத்துணையின் கருத்துக்களை ஆமோதித்து நடந்து கொள்வதன் மூலம் வெற்றி பெற இயலும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் எழுத்து வேகத்தினை உயர்த்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவார்கள். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி வருவதன் மூலம் மனதில் தன்னம்பிக்கை உயரும். மனப்பாடப் பயிற்சியில் லேசான தடுமாற்றம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கல்விநிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

பெண்கள் : சாதுர்யம் நிறைந்த பேச்சு உங்களின் பலமாக உள்ளது. அண்டை வீட்டாரின் சொந்த விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது கணவரையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. உறவினர்களின் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் முக்கியப் பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்.

உடல்நிலை : உடல் ஆரோக்யத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் நேரம் இது. குறிப்பாக பெண்கள் நரம்புத்தளர்ச்சி, உடல் அசதி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். மனதில் உண்டாகும் இனம்புரியாத கலக்கம் உடல்சோர்வாக வெளிப்படும். உள்ளத்து உணர்வுகளை அவ்வப்போது நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்து வந்தாலே எந்த ஒரு நோயையும் வெற்றி காண இயலும்.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவார்கள். தனியார் துறை மற்றும் ஐ.டி.துறையைச் சேர்ந்த பணியாளர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆயினும் உழைப்பிற்கேற்ற ஊதியம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி மற்றும் காவல்துறை பணியாளர்கள் நற்பெயர் காண்பார்கள். இயந்திரத்துறை பணியாளர்கள் பணியின்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொழிலதிபர்கள் அதிக முதலீட்டினைத் தவிர்த்து குறைந்த முதலீட்டில் லாபம் காண முயற்சிக்க வேண்டும். ரியல் எஸ்டேட், கமிஷன், தரகு முதலான தொழில் செய்பவர்கள் குருவின் அருளால் சிறப்பான லாபத்தினைக் காண்பார்கள்.
பரிகாரம் : தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது, தியானநாராயண ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.

தனுசு : குரு பெயர்ச்சி 2020 – 2021

மூலம் : சாதுர்ய பேச்சால் சாதிப்பீர்கள் 70/100

பொது : கடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு  மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். ஜென்ம ராசிக்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய குரு தன ஸ்தானத்தில் அமர்வதால் சுகமான வாழ்வினைக் காண்பீர்கள். அதே நேரத்தில் நட்சத்திர அதிபதி கேதுவின் 12ம் இடத்து அமர்வினால் ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடும் தோன்றும்.

நிதி : அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அநாவசிய செலவினங்களைத் தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நிலுவையில் உள்ள பாக்கித்தொகைகள் வசூலாகும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். பொருளாதார நிலை உயர்வடையக் காண்பீர்கள்.
குடும்பம் : ஆளுக்கொரு பாதையில் சஞ்சரிக்கும் குடும்பத்தினரை ஒருங்கிணைப்பதில் சற்று போராட்டம் காண்பீர்கள். எல்லோருடைய தேவையையும் நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். உடன்பிறந்தோருக்கு நிதியுதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். தேர்வு நேரத்தில் குரு பகவானின் அருளால் பொது அறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் பெறுவார்கள்.

பெண்கள் : உங்களின் விவேகமான அணுகுமுறையால் குடும்பப்பிரச்னைகளை எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்க வைப்பீர்கள்.  கணவரோடு அவ்வப்போது வீண் விவாதம் தோன்றும். அவருக்கு சரியென்று படுவது உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம். ஆயினும் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்திற்கு குறைவு நேராது. பிரச்னையான சூழலில் பேசாமல் அமைதியாக இருப்பதன் மூலம் செயல்வெற்றி கண்டு வருவீர்கள்.

உடல்நிலை : ஒற்றைத் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, கைகால் குடைச்சல், இடுப்பு வலி போன்ற பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம். இயற்கை மருத்துவமுறை நன்மை தரும். புதிய மருந்துகளால் உடலில் பக்க விளைவுகள் தோன்றக்கூடும். எச்சரிக்கை தேவை.

தொழில் : குரு நீசம் பெற்றாலும் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல சம்பாத்யத்தைக் காண்பீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் அவ்வப்போது கேம்ப், இன்ஸ்பெக்ஷன் என்று அதிக  அலைச்சலை சந்திக்க நேரிடும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ். சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்துச் செயல்பவடுவது நல்லது. தொழிலதிபர்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வார்கள். ஓய்வின்றி செயல்பட்டாலும் அதற்குரிய தனலாபத்திற்கும் குறைவிருக்காது.

பரிகாரம் : மஹாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள்.

பூராடம் : சேமிப்பு பன்மடங்காகும் 75/100

பொது : எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். ராசிநாதன் குருவின் தன ஸ்தான சஞ்சாரமும், நட்சத்திரநாதன் சுக்ரனே தனகாரகன் என்பதாலும் பொருள் சேமிப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவீர்கள்.
நிதி : பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடந்த சில வருடங்களாகக் காண இயலாத வளர்ச்சி அடுத்து வரும் காலத்தில் உண்டாகும். சம்பாதிக்கும் பணம் புதிய சொத்தாக உருமாறும். வீடு, மனை வாங்க முயற்சிப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். தங்க நகை, ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். சொத்துப் பிரச்னை சார்ந்த வழக்குகள் சாதகமான முடிவினைக் காணும்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள். குடும்பத்தினர் மத்தியில் இருந்து வரும் மனக்கசப்பினைப் போக்கி அனைவரையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சின் மூலம் எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பீர்கள். உறவினர்கள் வழியில் உண்டாகும் கலகத்தினையும் அழகாக சமாளித்து யாருக்கும் எவ்வித பாதகமுமின்றி குடும்பத்தை அழகாக வழிநடத்திச் செல்வீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலை நல்ல வளர்ச்சியைக் காணும். மதிநுட்பம் கூடும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சிறப்பு உயர்கல்விக்காக அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். சிறு சிறு கவனக் குறைவின் காரணமாக உண்டாகும் நிகழ்வுகள் தேர்வின்போது பெரிய தாக்கத்தினை உண்டாக்கலாம் என்பதால் அதீத கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பெண்கள் : ஆடம்பர செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது உங்களது முக்கியமான கடமையாக அமைகிறது. சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நீங்கள் அணிந்திருக்கும் நகை மற்றும ஆபரணங்களின் மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். என்றும் மாறாத புன்னகை என்பது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்திக் காட்டும். கணவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு பக்கபலமாகத் துணை நிற்பீர்கள்.

உடல்நிலை : குருவின் சஞ்சாரம் திருப்திகரமாக உள்ளதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனினும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருப்பதை நினைவில் கொண்டு உடல் ஆரோக்யத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆறாம் வீட்டு ராகு ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடல் ஆரோக்யத்திற்கு துணை செய்வார் என்பதால் பயம் தேவையில்லை. குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் அறுவை சிகிச்சைகள் நன்மையைத் தரும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.
தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோகத்தில் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரியும். பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்பு வந்து சேரும். அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவீர்கள். சொந்த ஊரை ஒட்டி இடமாற்றத்திற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக உள்ளது. சுயதொழில் செய்வோர் நல்ல தன லாபத்தினைக் காண்பார்கள். ஜோதிடம், புரோஹிதம், வைதீகம், கோவில் பூஜை சார்ந்த தொழிலைச் செய்து வருபவர்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையக் காண்பார்கள். கலைத்துறையினர் விருது பெறுவர். வியாபாரிகள் தங்கள் முகராசியின் மூலம் நற்பெயர் அடைவர். தொழிலதிபர்கள் தங்கள் ஸ்தாபனத்திற்கு மேலும் பல கிளைகளை உருவாக்கும் முயற்சியில் வெற்றி காண்பர். மொத்தத்தில் தொழில் வளர்ச்சி என்பது சிறப்பாகவே உள்ளது.

பரிகாரம் : காமதேனு வழிபாடு என்பது நன்மை தரும்.

உத்திராடம் 1ம் பாதம் : போட்டியில் வெற்றி   70/100

பொது : சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் அக்கறை கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக அமையும். நீங்கள் கூறும் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்கும். அதுவே சில நேரத்தில் உங்களுக்கு எதிரானதாகவும் திரும்பக்கூடும். நம் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் மத்தியில் மட்டும் பேசுவது நல்லது. குருவை ராசிஅதிபதி ஆகவும், சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களது கவுரவம் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் நிச்சயம் உயர்வடையும்.
நிதி : ஜனவரி ஆறாம் தேதி வரை சீராக இருந்து வரும் தன வரவு அதன் பிறகு வேகமான வளர்ச்சியைக் காணும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்து வாங்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக விற்க நினைக்கும் சொத்து ஒன்று நல்ல விலைக்குப் போகும். அதே நேரத்தில் முன்பின் தெரியாத புதிய நபர்களை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் இறங்கக் கூடாது. மாற்றுமொழி பேசும் நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை.

குடும்பம் : பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். அவர்களது ஆதரவுடன் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். குடும்ப விஷயங்களில் நண்பர்களின் தலையீட்டினை அனுமதிக்காதீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலையில் அதிக அக்கறை கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றம் காண்பீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலை ஆசிரியர்களின் துணையுடன் வளர்ச்சியைக் காணும். அதே நேரத்தில் புதிய பாடத்திட்டம் மாணவர்களின் மனதில் குழப்பத்தினை உண்டாக்கக்கூடும். உயர்கல்விக்குள் நுழைந்திருக்கும் மாணவர்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் தடுமாற்றம் காண்பார்கள். கலைத்துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். போட்டித்தேர்வின் போது சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் உண்டாகும் குழப்பத்தினைப் போக்க தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். கணிதம், சட்டம், பொருளாதாரம், வணிகவியல் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் பொறுப்புகள் கூடுவதால் சற்றே ஆயாசமாக உணர்வீர்கள். உதவி செய்வதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவ்வப்போது தலைதுாக்கும். உங்கள் உள்ளத்து உணர்வுகளை கணவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்திருங்கள். உடல் உடல்நிலை பெறுவதோடு சுகமான சூழலையும் உணர்வீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுவதன் மூலம் ஒரு சில சங்கடத்தினை சந்திக்க நேரலாம். கவனம் தேவை.

உடல்நிலை : நீண்ட நாட்களாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். அதே நேரத்தில் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நேரம் நன்றாக இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இரவில் நிம்மதியான உறக்கம் தேவை. பகலில் உறங்குவதைத் தவிர்க்கவும். ஷிப்ட் முறையில் நைட் டியூட்டி பார்ப்பவர்கள் முடிந்தவரை அதனைத் தவிர்த்து பகல் நேரத்தில் பணி செய்ய முயற்சிப்பது நல்லது.

தொழில் : மார்ச் மூன்றாம் தேதிக்குப் பிறகு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கான வாய்ப்பினை உத்யோகஸ்தர்கள் பெறுகிறார்கள். அரசியல்வாதிகள் பலம் பெறுவர். பணிச்சுமை என்பது தொடர்ந்தாலும் அதனை திறம்பட சமாளிக்கும் வலிமையையும் பெற்றிருப்பீர்கள். முயற்சி என்பது மட்டும் தேவை. பணியில் காட்டும் சிறு அலட்சியத்திற்கும் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் போட்டியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வெற்றி காண்பர். தொழில்முறை எதிரிகளையும் நண்பர்களாகவும் பங்குதாரர்களாகவும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கூடி வரும். சட்டம், காவல், ராணுவம், வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். சிறுகுறு தொழில் செய்பவர்கள் அதனை பெரிதாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பார்கள்.

பரிகாரம் : மாதத்தில் ஒருநாள் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடவும்.

மகரம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

உத்திராடம் 2, 3, 4ம் பாதம் : முகூர்த்தநாள் குறிக்கலாம் 65/100

பொது : 12ம் வீட்டில் இதுநாள் வரை சஞ்சரித்து அதிக அலைச்சலைத் தந்த குரு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு வர உள்ளார். பொதுவாக ஜென்ம குருவினால் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும், மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் பின்பற்ற மனம் ஒப்பாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண்பீர்கள். குரு நீச பலம் பெற்றாலும் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது நடக்கும். ராசிநாதன் ஆக சனியையும், நட்சத்திர நாதனாக சூரியனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு மனதில் சஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது.

நிதி : பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு வியாஜ்ஜியங்கள் விரைவாக முடிவிற்கு வரும். தான, தருமம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும். வரவில் பெரிய முன்னேற்றத்தைக் காண இயலாது என்றாலும் செலவினங்களும் கட்டுக்குள் இருந்து வரும். சிக்கன முயற்சிகள் பலன் தரும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வராமல் இழுபறியைத் தந்தாலும் அதனை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.

குடும்பம் : குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு குருவின் இந்த ஒரு வருட சஞ்சாரத்திற்குள் நல்ல வரன் அமையும்.

கல்வி : மாணவர்களின் கல்வித்தரமானது இந்த வருடத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருந்து வரும். ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
பெண்கள் : குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீர குலதெய்வ வழிபாட்டினை வற்புறுத்தி செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண்வம்பு பிரச்னைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் கணவரின் முன்னேற்றத்தில் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களின் வெற்றியிலும் உங்களது பங்கு பிரதானமாக இருக்கும்.
உடல்நிலை : காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு ஆகிய பகுதிகளில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். ஒரு சிலருக்கு உடற்தோலில் குறைபாடு தோன்றலாம். அதிகப்படியான டென்ஷனின் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொழில் : உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். உத்யோக ரீதியாக இருந்து வந்த மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள். தொழில்முறையில் நல்ல பெயரை அடைந்தாலும், எதிர்பார்க்கும் தனலாபத்தினைப் பெறுவதில் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : ஞாயிறு தோறும் சரபேஸ்வர வழிபாடு செய்து வாருங்கள்.

திருவோணம் : மழலைக்குரல் கேட்கும் 60/100

பொது : 3, 12ம் பாவகங்களுக்கு அதிபதி ஆகிய குரு ஜென்ம ராசியில் இடம் பெறும் நேரத்தில் மன சஞ்சலம் அதிகரிப்பதில் வியப்பேதும் இல்லை. கோவில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்து சேரும். சனியை ராசி அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவீர்கள். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் நினைத்த காரியங்களை அமைதியான முறையில் சாதித்து வருவீர்கள். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு தத்துவார்த்தமாக பதிலளித்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சும் சிரிப்பும் உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சிக்கலான  நேரத்தில் வார்த்தை ஜாலத்தினால் பிரச்னையிலிருந்து வெளியே வருவீர்கள்.

நிதி : பொருளாதார நிலையில் லேசான சிரமத்தினைத் தவிர குறிப்பிடத்தக்க சிரமமான சூழ்நிலை ஏதும் வராது. நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. கையிருப்பில் பணம் ஏதும் நிற்காது என்பதால் வங்கிக்கடன் உதவியுடன் சொத்துசேர்ப்பில் ஈடுபடலாம். ஆன்லைன் வர்த்தகம், நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு முதலான எளிய வகை பரிமாற்றங்களின் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

குடும்பம் : புத்ர காரகனான குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். உடன்பிறந்தோர் உதவி நாடி வரக்கூடும். அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அவர்கள் வகையில் நடைபெற உள்ள சுபநிகழ்ச்சிகளுக்கு மூலகாரணமாக நீங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து சேரும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

கல்வி : 2021ம் வருடத்தின் முற்பாதியில் உங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான நிலையினை உணர்வார்கள். ஆய்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை தொடரும். கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு அவற்றின் உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். கணவர் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பார். அவரது நண்பர்களில் நல்லவர், தீயவரைப் பிரித்தறிந்து தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையைச் சொல்வீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் இவ்வருடத்தில் உண்டாகும். குடும்ப விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.

உடல்நிலை : சர்க்கரை வியாதிக்காரர்கள், உடலில் கொழுப்புசத்து மிக்கவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிரதி மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உடல்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் முகத்தினில் நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. முருங்கைக் கீரையும், அகத்திக்கீரையும் உங்கள் உடல்நிலைக்கு மேலும் வலு சேர்க்கும்.

தொழில் : அலைச்சலுக்கு ஏற்ற தனலாபம் கிட்டுவதோடு உங்கள் நிர்வாகத்திறனும் மேம்படும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். கடைநிலைப் பணியாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் போன்றோர் முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்விற்காகக் காத்திருந்த அரசுப் அலுவலர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். சுயதொழில் செய்வோரில் டிரை கிளீனர்ஸ், ப்யூட்டி பார்லர், சுத்தம், சுகாதாரம் சார்ந்த தொழில்கள் சிறக்கும். டிரை ப்ரூட்ஸ், விலையுயர்ந்த பழ வகைகள், அளவில் சிறிய பர்னிச்சர் சாமான்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் சில்லறை வணிகர்கள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காது சிறிது நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம் : திங்கட்கிழமையில் அருகிலுள்ள சிவாலய பிரகாரத்தை 11 முறை பிரதக்ஷிணம் செய்து வணங்கி வாருங்கள்.

அவிட்டம் 1, 2ம் பாதம் : வெளிநாடு செல்லும் யோகம் 65/100

பொது : குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குருபலமும் வந்து சேர்கிறது. நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். ‘துஷ்டரைக் கண்டால் துார விலகு’ என்னும் பழமொழியை மனதில் கொண்டு பிரச்னைக்குரிய மனிதர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. தொலைதுாரப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்களை இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள். இன்டெர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். ராசி அதிபதி ஆக சனியையும், நட்சத்திர அதிபதி ஆக செவ்வாயையும் கொண்டிருக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் குருவின் இணைவு நல்லதையே செய்யும்.

நிதி : முன்னோர்களின் சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும். வழக்கு வியாஜ்ஜியங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்னைகள் தீர்வடையும். வண்டி, வாகனங்களால் உண்டான செலவுகள் குறையும். அதே நேரத்தில் வெளியூர் பயணத்தின்போது ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

குடும்பம் : குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். குடும்பப் பிரச்னைகளில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்ப விவகாரங்களிலும், இதர பணிகளிலும் அமைதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்வி : மாணவர்களைப் பொறுத்த வரை கிரஹ சஞ்சார நிலை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப் படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.

பெண்கள் : குடும்பத்து பிரச்னைகளை வெளியே சென்று பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். முன்பின் தெரியாத மாற்றுமொழி பேசும் பெண்மணியின் நட்பு அநாவசிய பிரச்னைகளை உருவாக்கும். அவ்வப்போது கணவரோடு கருத்து வேறுபாடு கொண்டாலும் அவரது அனுமதியின்றி எந்த ஒரு பணியையும் செய்யமாட்டீர்கள். கணவரது உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குருவின் பலத்தினால் குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.
உடல்நிலை : சரியான நேரத்திற்கு சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமே உங்களது ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல்நிலையில் தோன்றும் சிறிய மாற்றத்தினைக்கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இராமல் உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது. நரம்புத் தளர்ச்சி, தைராய்டு பிரச்னை ஆகியன உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தொழில் : அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி வட்டத்தை உருவாக்குவதாக நினைக்கும் மேலதிகாரியோடு மோதல்போக்கு உண்டாகலாம். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள்,  ஜவுளி, வாசனாதி திரவியங்கள், பேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டுகள் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். அலைச்சல் கூடினாலும் லாபம் கிட்டும்.

பரிகாரம் : செவ்வாய் தோறும் வேல்வழிபாடு செய்து வாருங்கள்.

கும்பம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

அவிட்டம் 3, 4ம் பாதம் : பணவிஷயத்தில் எச்சரிக்கை  50/100

பொது : வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் சனியை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் குருவின் மகர ராசி சஞ்சார காலத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

நிதி : நேரத்தினை உணர்ந்துகொண்டு அடுத்தவர்களுக்கு கடனுதவி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்காக முன்நின்று செயல்படும் விஷயங்களில் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக இந்த நேரத்தில் எவரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது. கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பம் : குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். உறவினர் ஒருவரிடம் கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டு வருவீர்கள். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தினைக் காண்பீர்கள். அவர்களை நிதானித்துச் செயல்படும்படி அவ்வப்போது அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறீர்கள்.
கல்வி : உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தினை உயர்த்தும். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது நல்லது. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையைப் பெரிதாக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தவறாகப் புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினர்கள் உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வர். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை கணவரோடு பகிர்ந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உடல்நிலை : ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். ஒரு சிலருக்கு சிறுநீரகக் கோளாறுகள், பித்தப்பையில் கற்கள் போன்ற பிரச்னைகள் தோன்றலாம். தினசரி தண்ணீரை காய்ச்சிப் பருகுவது நன்மை தரும்.
தொழில் : உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் மார்ச்  3ம் தேதி வரை இருந்து வரும். மார்ச் 3ம் தேதிக்குப் பிறகு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஆயினும் ஜூன் மாதத்திலிருந்து இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களின் வியாபாரிகள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

சதயம் : பொறுமை பெருமை தரும் 55/100

பொது : பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையைத் தந்தாலும் நீங்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள் என்பதால் கவலை இல்லை. அதிகாரப்போக்கும் அவசரமும் அதிக இழப்பினத் தந்துவிடும். மதியூகமும், நிதானமும் மட்டுமே தற்போதைய சூழலில் துணைநிற்கும். சனியை ராசி அதிபதி ஆகக் கொண்டிருந்தாலும் ராகுவை நட்சத்திர அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் கும்ப ராசிக்காரர்களில் சதயத்தில் பிறந்தவர்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குரு, சனி ஆகியோர் சிரமத்தைத் தந்தாலும் ராகுவின் பலம் உங்களைக் காப்பாற்றும். அதிர்ஷ்டத்தின் அளவு குறைந்தாலும் உங்கள் தனித்திறமையின் காரணமாகவும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து வருவதன் மூலமாகவும் வெற்றி காண்பீர்கள்.
நிதி : கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுத்துவிடாதீர்கள். அதேபோல, அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது. அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து அவர்கள் பட்ட கடனை அடைப்பதையும் முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது.

குடும்பம் : குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்காக திட்டமிடுவீர்கள், வருகின்ற மே மாதத்திற்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள்.

கல்வி : மாணவர்கள் சிறப்பானதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உங்களுடைய அசாத்தியமான ஞாபக சக்தி உங்களுக்கு துணை நிற்கும். ஆயினும் கூடுதலாக எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வேகமாக எழுதும் கலையையும் வளர்த்துக் கொண்டீர்களேயானால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். விலங்கியல், விவசாயம், வரலாறு, கிரிமினாலஜி, மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

பெண்கள் : நினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் உடனடியாக காரியத்தில் இறங்குவதால் வருத்தமே மிஞ்சும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை சேர்க்க அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமைவதால் அநாவசியமாக உடன் இருப்பவர்கள் மீது உங்கள் கோபத்தினை வெளிப்படுத்துவீர்கள். கணவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும்.
உடல்நிலை : அளவுக்கதிகமான டென்ஷனும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதாலும் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றக்கூடும். எலும்பு முறிவு அல்லது எலும்பு மஜ்ஜைகளில் பிரச்னை, மூட்டுகளில் தொந்தரவு ஆகியவற்றால் அவதிப்பட நேரிடும். வண்டி, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தொழில் : உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி காண இயலும். ஜூன்  முதல் நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு உதவியாளர்களின் துணையோடு அலுவல் பணியினை செய்துமுடிப்பீர்கள். இருந்தாலும் காரியம் ஆகவேண்டும் என்றால் அடுத்தவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக இறங்க வேண்டிய சூழலே நிலவுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மே மாதத்தின் பிற்பகுதியில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த நேரத்தில் நல்ல நிலையினை அடைவார்கள்.

பரிகாரம் : ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு வருவது நன்மை தரும்.

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : ஆன்மிக சுற்றுலா செல்வீங்க 50/100

பொது : குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தினால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். விடை தெரியாத கேள்விகளால் மனதில் குழப்பமான சூழல் நிலவி வரும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். அநாவசிய சிந்தனைகளால் மனதில் ஒருவித பய உணர்வு இடம்பிடிப்பதை தவிர்க்க இயலாது. குருவை நட்சத்திர அதிபதி ஆகவும், சனியை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இவ்விருவரின் சாதகமற்ற சஞ்சாரம் சற்றே சிரமத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

நிதி : சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கு முன்னர் செலவுகள் காத்திருந்தாலும் சிக்கனத்தையும் கடைபிடிப்பீர்கள். அரசாங்க வங்கிகள் மூலமாகக் கடன் பெறக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் செலவழிப்பீர்கள். எதிர்கால நலனுக்காக நீண்ட கால சேமிப்பில் இறங்க முற்படுவீர்கள். ஒரு புறம் ராகு பொருளாதார நிலையை உயர்த்தினாலும் மறுபுறம் விரய ஸ்தான குருவினால் எதிர்பாராத வகையில் தவிர்க்க முடியாத செலவுகளையும் சந்திப்பீர்கள்.
குடும்பம் : உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக அவர்களை விட்டு பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரிடையே முக்கியத்துவம் இழப்பதாக உணர்வீர்கள். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாது உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாக வெளிப்படுத்திவிடுவது நல்லது. சுபவிரயம் உண்டு என்பதால் சுபநிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள்.

கல்வி : மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதி முடிக்க கூடுதல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்வு நேரத்தில் கிரஹ நிலை சாதகமாக இருப்பதால் கூடுதல் வேகத்துடன் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. பொறியியல்துறை, ஆசிரியர் பயிற்சி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறையில் படித்து வரும் மாணவர்கள் ஏற்றம் காணுவார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவ்வப்போது ஒரு சில தடைகளை சந்தித்து வந்தாலும் மே மாதத்தின் இறுதியில் தடைகள் நீங்கப் பெற்று வெற்றி காண்பார்கள்.
பெண்கள் : அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். உங்கள் குடும்ப பிரச்னைகளை உறவினர்கள் மத்தியில் வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறவினர்களுக்கு சாதகமான வாய்ப்பாக உருவாகிவிடும். உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கொண்டே உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்து வரவும்.

உடல்நிலை : உணவுப் பழக்கத்தில் நிலவும் கட்டுப்பாடின்மையால் அவ்வப்போது உடல்நிலையில் அசதி தோன்றும். நரம்புத் தளர்ச்சி, கைகால் வலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அதிகம் அவதிப்பட நேரிடும். கீரை வகைகளையும். புரோட்டீன் சத்து மிக்க பருப்பு வகைகளையும் ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. காபி, டீ போன்றவற்றையும் நொறுக்குத் தீனி வகைகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

தொழில் : வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சற்று சிரமம் காண்பார்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவல் பணிகளில் மேலதிகாரிகளின் உதவி கிட்டாது போகும். அதே நேரத்தில் கீழ்நிலைப் பணியாளர்கள் துணை நிற்பார்கள். உங்களது தனித்திறமையின் காரணமாக கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துவிடுவீர்கள் என்றாலும் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போக வேண்டியது அவசியமாகிறது. சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லறை வணிகம் சிறக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள்.

பரிகாரம் : பிரதோஷ நாட்களில் நந்தியம்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

மீனம் : குரு பெயர்ச்சி 2020 – 2021

பூரட்டாதி 4ம் பாதம் : பிள்ளைகளுக்கு சுபசெலவு 75/100

பொது : வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு ராசி அதிபதியும் நட்சத்திர அதிபதியும் ஆகிய குரு வரவிருப்பது உங்களுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிகத் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். குரு நீச பலம் பெற்றாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி என்பது நிச்சயம். ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.

நிதி : பொருளாதார நிலைமை மிக நன்றாக இருந்து வரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய கால சேமிப்பில் ஈடுபடுவீர்கள். 2021ம் ஆண்டின் பிற்பகுதியில் உங்களது பட்ஜெட்டையும் மீறி சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் திருமணம். மேற்படிப்பு போன்ற சுபசெலவுகளாக இருக்குமே அன்றி அநாவசிய செலவுகள் ஏதும் இருக்காது.
குடும்பம் : உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் காண்பீர்கள். விலகியிருந்த உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். நீங்கள் தாமரை இலைத் தண்ணீர் போல் நழுவிச்சென்றாலும் உங்களை விடாது தொடர்வார்கள். பிள்ளைகளின் வழியில் அதிக செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களால் உண்டாகும் மனமகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. குடும்பத்தினரோடு பொழுதினைக் கழிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.

கல்வி : மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதில் மன நிம்மதி உண்டாகும். கணவரின் பணிகளுக்கு அவ்வப்போது தக்க ஆலோசனை வழங்குவீர்கள். பெரிய பொறுப்புகளை முழு மனதோடு செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

உடல்நிலை : மே  வரை உடல்நிலையில் ஒரு சில உபாதைகளை சந்திக்க நேரிடும். தைராய்டு மற்றும் கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ருசியான தின்பண்டங்களையும், எண்ணை பலகாரங்களையும் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : வேதபாடசாலைக்கு உங்களால் இயன்ற நிதியுதவி செய்யுங்கள். தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

உத்திரட்டாதி : நாளெல்லாம் திருநாளே  70/100

பொது : பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை புக்தியைக் கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். ராசி அதிபதி ஆக குருவையும், நட்சத்திர அதிபதி ஆக சனியைக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த இருவரும் இணைந்து வெற்றியைத் தரும் ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தொடர்வெற்றி கண்டுவருவீர்கள்.
நிதி : பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து வரும். அதே நேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். புதிதாக வண்டி. வாகனங்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற காத்திருப்போருக்கு நிலைமை சாதகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைப்பது போல் தோன்றினாலும் பிற்காலத்தில் அதன் மூலம் புதிய பிரச்னைகள் உருவாகலாம். பாகப்பிரிவினை விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

குடும்பம் : பிள்ளைகளைப் பற்றி மட்டும் கவலை கொள்ளும் நீங்கள் பெற்றோர் நலனிலும் அக்கறை கொள்ளுதல் நல்லது. ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவழித்தீர்களேயானால் குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்கலாம். உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். நெடுநாளைய குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் உங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தையும், அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வீர்கள்.
கல்வி : குருவின் திருவருளால் மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரியான முறையில் தேர்விற்கு தயார் செய்து கொண்டீர்களேயானால் எதிர்பார்க்கும் கேள்விகளை வினாத்தாளில் காணப்பெற்று விடையளிக்கலாம். தேர்வு நேரத்தில் கிரஹ நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். மருத்துவத்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்துத்துறை மாணவர்களும் ஏற்றம் காணுவீர்கள்.

பெண்கள் : உங்களுடைய அளவு கடந்த உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவரவர் தங்கள் சொந்த நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்தும்கூட பெரிதாக கவலைப்படாமல் அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்து தருவீர்கள். பொதுவாக விட்டுக்கொடுத்தலின் மூலம் நற்பெயரை அடைவீர்கள். கணவரின் பணிகளுக்கு பக்கபலமாக துணைநின்று அவரது வெற்றிக்கு பாடுபட்டு வருவீர்கள்.
உடல்நிலை : பொதுவாக உடல்நிலை சீராக இருந்துவரும். ஆயினும் ராகு, குரு ஆகியோரின் நீச பலத்தினால் வாய்ப்புண், வாயுப்பிடிப்பு, அலர்ஜி, தொற்றுவியாதிகள் போன்றவற்றிற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. உடம்பில் தோன்றும் அலர்ஜிக்கான அறிகுறிகளை உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது.

தொழில் : தொழில் நிலை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வரும். நீங்களாக விரும்பினாலொழிய ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல தனலாபமும் தொடர்ந்து இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் உடனுக்குடன் சுறுசுறுப்பாக செயல்படுவதன் காரணமாக மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவதோடு மட்டுமல்லாது முக்கியமான வேலைகள் மீண்டும் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படுகின்ற நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், விவசாயிகள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு நற்காலமாக இருக்கும். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள்.
பரிகாரம் : பௌர்ணமி நாளில் சந்திர தரிசனம் செய்வதோடு அபிராமி அந்தாதி படித்து அம்பிகையை வணங்கி வாருங்கள்.

ரேவதி : ஆடம்பர பொருள் சேரும் 70/100

பொது : பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைப் போல, நீங்கள் பொறுமையுடன் காத்திருந்ததற்கான பலனைக் காண உள்ளீர்கள். நட்சத்திர அதிபதி புதனின் விவேகமும், ராசி அதிபதி குருவின் நேர்மையும் உங்கள் வாழ்வின் இரு கண்களாக அமைந்திருக்கும். எல்லோரையும் மொத்தமாக நம்பிவிடாமல் நல்லவர், தீயவர்களை பிரித்தறிந்து பழக வேண்டியது அவசியம். எல்லாவற்றிலும் மிகுந்த நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உங்களது எண்ணம் அடுத்தவர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றாலும் எங்கே, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொய்மையும் வாய்மையிடத்து என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப நன்மையை விளைவிக்கும் பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்பதை உணர்ந்தீர்களேயானால் வெற்றி நிச்சயம்.

நிதி : பொருளாதார நிலை நன்றாக இருப்பதால் நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. உடன்பிறந்தோரால் செலவுகளை சந்திக்க நேரிடும். ஆயினும் அவர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயமும் உண்டு. பலவழிகளிலும் பொருள்வரவு இருந்துவரும். 2021 மே  வரை மட்டுமே உங்களால் சேமிப்பில் இறங்கமுடியும் என்பதால் வீண் விரயங்களைத் தவிர்த்து முடிந்த வரை சேமித்துவைப்பது நல்லது. எறும்பினைப் போல் நீங்கள் சேமித்து வைப்பது பின்னாளில் பொருள்வரவு தடைபடும் நேரத்தில் உதவும்.
குடும்பம் : ஒரு சில நேரத்தில் உடன்பிறந்தோரால் தொல்லைகள் உருவாகும். அதே நேரத்தில் அவர்களே மனம் திருந்தி உங்களுக்கு உதவத் தொடங்குவார்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தில் அக்கறை கொண்டு செயல்படும் நீங்கள் சிறிது அவர்களின் மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் பிடிவாத குணங்கள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கினாலும் அவர்களோடு அதிக நேரத்தை செலவழிப்பது நன்மை தரும். பெற்றோரின் உடல்நிலையில் ஜூன், ஜூலை மாத வாக்கில் சிறப்பு கவனம் தேவை.

கல்வி : குரு பகவானின் துணையினால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எழுதும் திறன் குறைவாக இருப்பதால் தேர்வினில் விடையளிக்க நேரம் போதவில்லை என்ற குறை உண்டாகலாம். எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பழகி வந்தால் தேர்வு நேரத்தில் கை கொடுக்கும். சட்டம், பொருளாதாரம், கணிதம், வணிகவியல், மருத்துவம் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : நீங்கள் விரும்பிய ஆடம்பர பொருட்கள் வீட்டினில் சேரும். அநாவசியமாகப் பேசுவது ஆபத்தினைத் தரும் என்பதை நீங்கள் உணருவது நல்லது. நம் வீட்டுப் பிரச்னைகளை வெளியில் சொல்வது நல்லதல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களை பாராட்டிப் பேசி ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் பலவீனமாக உள்ளது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் என்பதால் மனதில் லேசான விரக்தி தலைதுாக்கும். கணவருக்கு பணிநிமித்தம் பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள்.

உடல்நிலை : உடல்நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கமான சூழல் இருந்துவரும். ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள் உரிய சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம்.
தொழில் : உண்மையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம் என்பதால் தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்தித்து வருவீர்கள். அலுவலகத்திலும் சரி, இல்லத்திலும் சரி உங்கள் புகழ் பாடியே நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் புன்னகையோடு எடுத்த காரியத்தை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். தொழில் ரீதியாக அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். பல புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு உங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள முயற்சிப்பீர்கள். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். பலசரக்குக் கடை, ஹோட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால், வித்தியாசமான தின்பண்டங்களை விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.

பகிரவும்...