Main Menu

குருபெயர்ச்சி பலன்கள் 2018

அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

மேஷம் – அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான், வரும் 4.10.18 முதல் 28.10.19 வரை 8-ம் வீட்டில் மறைவதால், எதையும் சமாளித்து மீளும் சாமர்த்தியத்தையும், சோதனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தருவார். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களும், அடுக்கடுக்கான செலவுகளும் ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ப வருமானமும் இருக்கும். சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். ராஜதந்திரமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பழைய கடன்கள் விஷயத்தில் இதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்துத் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வழக்குகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல இரண்டு, மூன்று வேலைகளைச் சேர்த்துச் செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது அவசியம். குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பார்ப்பதால், பிரசித்தி பெற்ற புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். .

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்குகள் சாதகமாக முடியும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைப் பற்றிய கவலை ஏற்படும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 9-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடுகட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது. சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். வேலையாள்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் அவசரம் வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வியாபாரிகளுக்கு:

அலுவலகத்தில் பணிகளில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை விட வயதிலும் அனுபவத்திலும் குறைவானவர்களிடமும் பணிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு:

பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டியது அவசியம்.

கலைத்துறையினருக்கு:

சின்னச் சின்ன வாய்ப்புகளைக்கூட போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

இந்த குருப்பெயர்ச்சி சற்று போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும்.

ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 7-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள் வீர்கள். வீண் சண்டை, விவாதங்களில் இருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

திருமணம் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சிலர் வங்கிக் கடனுதவி பெற்று வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள். புதிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடினமான காரியங்களையும்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.

மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்திருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமையால் சோர்வு உண்டாகும். திடீர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விலகும். மூத்த சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். புதுப் பொறுப்புகளை நன்றாக யோசித்து ஏற்றுக்கொள்வது அவசியம்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். திருமணம் கூடிவரும். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறையும், மனதில் இனம் தெரியாத கவலைகளும் ஏற்படக்கூடும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், மனக்குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். பிள்ளைகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் கருத்துகளை அவர்களிடம் திணிக்க முயற்சி செய்யவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது அவசியம். கோயில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு உற்சாகம் தரும் பங்குதாரர் அமைவார். சிலர் புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. கமிஷன், ஏற்றுமதி – இறக்குமதி, கட்டடத் தொழில், அரிசி வியாபாரம் ஆகிய வகைகளில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கு காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப நடந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு:

விருப்பங்கள் நிறைவேறும். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நண்பர்களுடன் பழகுவதில் கவனமாக இருப்பீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு:

எதிர்பார்த்து கிடைக்காமல் போன வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். பிரபலமான கலைஞர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

இந்த குருப்பெயர்ச்சி சோர்ந்து துவண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

மிதுனம் – மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு எதிர்ப்புகளைத் தருவாரே என்று கலங்கவேண்டாம். ஓரளவுக்கு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களைச் சார்ந்திருக்காமல், உங்கள் முயற்சியால் முன்னேற நினைப்பீர்கள். உங்களுடன் பழகுபவர்களின் பலவீனங்களை உணருவீர்கள். சிலநேரங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். வீண் சந்தேகத்தாலும் ஈகோ பிரச்னையாலும் நல்ல வர்களின் நட்பை இழக்க நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படக்கூடும்.

ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, புறநகர்ப் பகுதியில் குடியேறுவீர்கள். தவணை முறையில் புதிய வாகனம் வாங்குவீர்கள். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை, மன இறுக்கம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் கருத்துவேறுபாடு கள் ஏற்பட்டு நீங்கும். வி.ஐ.பி.க்களுடன் அனுசரணையாகச் செல்லவும். நெருங்கிப் பழகிய நண்பர்கள்கூட உங்களைப் பற்றி குறை கூறுவார்கள். சமூகத்தின் மீது சின்னச் சின்ன கோபங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலர் உங்களைத் தவறான பாதைக்குச் செல்லத் தூண்டுவார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். உதவுவதாகச் சொன்னவர்கள் மனம் மாறிவிடக்கூடும் என்பதால், மாற்று வழியை யோசித்து வைப்பது நல்லது. சிலர் நேரில் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், பின்னால் உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் பிடிவாதப் போக்கு மாறும்.

குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.

குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகச் செல்ல நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு, வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். உங்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறாகப் பேசுவார்கள். வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும்.

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு, வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். உங்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறாகப் பேசுவார்கள். வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், பணம் வரத் தொடங்கும். வருமானம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளி மாநிலங்களில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப்பூர்வமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசாரமாகச் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மறுபடியும் பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் கலந்துகொள்வீர்கள். ஆனால், அடிக்கடி முன்கோபம் வந்து செல்லும். திடீர்ப் பயணங்கள், கடன் தொந்தரவுகளும் ஏற்பட்டு நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பதால், அவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே அவர்களுடைய வேலைகளையும் செய்ய நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். கடையை சொந்த இடத்துக்கு மாற்ற வங்கிக் கடனுதவி கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் எத்தனை உழைத்தாலும் ஒரு பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது, உயரதிகாரிகளுக்குத் தகுந்தபடி பேசும் வித்தையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள். சக ஊழியர்கள் விடுப்பில் செல்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்த தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க நேரிடும். புது வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:

பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். போட்டித் தேர்வுகளுக்குக் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் வெற்றி பெற முடியும். சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

கலைத்துறையினருக்கு:

மறைமுகப் போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் அலைச்சல்களையும் தந்தாலும் ஓரளவு வெற்றியையும் தரும்.

கடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

கலங்கி வருபவர்களின் கவலைகளைத் தீர்ப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து நன்மைகளை அள்ளித் தரவிருக்கிறார். இனி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அடிப்படை வசதி வாய்ப்புகள் உயரும். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சிந்தனையில் தெளிவும், செயலில் விவேகமும் காணப்படும். கருத்துவேறுபாடு காரணமாக மனக்கசப்புடன் இருந்த கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தாய்வழி உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரையை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள் இனி ஏற்படக்கூடாது என்பதில் விழிப்பு உணர்வுடன் இருப்பீர்கள். உங்களைப் பற்றிக் குறை கூறிய உறவினர்கள் மனம் மாறி வலிய வந்து பேசுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்ததை முடிப்பீர்கள். வெற்றியாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேக வைபவத்தை முன்னின்று நடத்துவீர்கள். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதரர்களுடன் ஒற்றுமை வலுப்படும். பணவரவு உயரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், பணிச் சுமையாலும் கூடுதல் பொறுப்புகளாலும் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தின் காரணமாக நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண்பழி ஏற்படும். கடன் பிரச்னைகளை நினைத்து கலக்கம் ஏற்படும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள், சளித் தொந்தரவு, கழுத்துவலி, வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6-ம் வீட்டில் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், அடிக்கடி வாகனம் பழுதாகி செலவு வைக்கும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தடைப்பட்ட விஷயங்கள் முடிவடையும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய வேலையாள்களை மாற்றுவீர்கள். இதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்று, மறுபடியும் பெரிய பதவியில் அமரும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் தவறுகளை இதமாகப் பேசித் திருத்துவீர்கள். இயக்கங்களில் முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு:

படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு:

எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படைப்புகள் பாராட்டும் பரிசும் பெறும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். படைப்புத் திறன் அதிகரிக்கும்.

இந்த குருமாற்றம் தொட்டதெல்லாம் துலங்கச் செய்வதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும்.

சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 27.10.19 வரை 4-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் கணவன் – மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பார்க்கவும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மூட்டு வலி, முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டு நீங்கும்.

வீடு, மனை வாங்கும்போது பத்திரங்களை ஒருமுறைக்கு இரண்டுமுறை சரிபார்த்து வாங்கவும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடவும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்வது அவசியம். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் அவசரம் வேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். குலதெய்வக் கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷ நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், மற்றவர்களிடம் நம்பிக்கையின்மை, சோர்வு ஏற்பட்டு நீங்கும். சுபச்செலவுகள் ஏற்படும். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். மறதியின் காரணமாக விலையுயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் அதிருப்தி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், டென்ஷன் அதிகரிக்கும். சில நேரங்களில் தனிமைப் படுத்தப்பட்டதாக நினைத்து வருந்துவீர்கள். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்கவும் நேரிடும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிலை ஏற்படும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகளின் திருமணம் கூடிவரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். மகனின் பிடிவாதப் போக்கு மாறும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுற்றியிருப்பவர்களைப் பற்றிப் புரிந்துகொள்வீர்கள். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபடி இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது அவசியம். தொழில் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். விளம்பர யுக்திகளைக் கையாள்வதன் மூலம் வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கலாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும். பங்குதாரர்களுடன் மோதல் போக்கு விலகும். நம்பிக்கைக்கு உரிய பங்குதாரர் விலக நேரிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கஷ்டப்பட்டு உழைத்தாலும் அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மாணவர்களுக்கு:

பாடங்களில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்க அதிகப்படியாக செலவு செய்யவேண்டி வரும்.

கலைத்துறையினருக்கு:

உங்கள் கற்பனைத் திறன் வளரும். ஆனால், உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.

இந்த குருமாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங்களையும் தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற வைப்பதாக அமையும்..

கன்னி – உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கனவு நனவாகக் கடுமையாக உழைப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 3-ம் இடத்தில் அமர்வதால், எந்த வேலையையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை போராடித்தான் முடிக்கவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன்- மனைவிக்கிடையே சச்சரவுகள் ஏற்பட்டாலும் அந்நியோன்யம் குறையாது. முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. விலையுயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலர் உங்களைப் பற்றி நேரில் நல்லவிதமாகவும், பின்னால் அவதூறாகவும் பேசுவார்கள். உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். வெளிவட்டாரத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீடு கட்டுவது, வாங்குவது சற்றுத் தாமதமாக முடியும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

க குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் உண்டு. வீண் நட்புகள் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரிபார்ப்பது அவசியம்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் -மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். சொந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிற மொழி பேசுபவர்களால் பயனடை வீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகு, அறிவு கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிகொள்ளும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். பெரிய பதவியில் இருக்கும் உங்களுடைய பழைய நண்பரால் ஆதாயமடைவீர்கள்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 4-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது விரக்தியடைவீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, ஈகோவால் கணவன் – மனைவிக்கிடையே சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியிலும் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரிகளே! சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனாலும், தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.

மாணவர்களுக்கு:

விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

கலைத்துறையினருக்கு:

பெரிய வாய்ப்புகள் வரும். உங்களுடைய யதார்த்தமான படைப்புகள் பாராட்டு பெறும்.

இந்த குருமாற்றம் சிறுசிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும், இடையிடையே வெற்றியுடன் மகிழ்ச்சியும் தரும்.

துலாம் – சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

நடுநிலை தவறாமல் இருப்பவர்களே!

உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக இருந்த குருபகவான், 04.10.2018 முதல் 28.10.2019 வரை தனஸ்தானத்தில் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பின் காரணமாக விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடன் இருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். நீண்டநாள்களாகப் போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவும். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறமொழியினர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 3-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்து செல்லும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் அதிகமாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், கொஞ்சம் சிக்கனமாக இருக்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். அடிக்கடி தூக்கம் குறையும். நண்பர்களுடன் மனவருத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடையிடையே பணவரவுடன், வி.ஐ.பி.க்களின் அறிமுகமும் கிடைக்கும்

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றி அழகு படுத்துவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனநிலை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு:

நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். சக மாணவர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு :

போட்டிகள் குறையும். தடைப்பட்ட வாய்ப்புகள் மறுபடியும் கிடைக்கும். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.

இந்த குருப்பெயர்ச்சி தொட்டதை துலங்க வைப்பதுடன், அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

விருச்சிகம் – விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சத்தியத்தைப் போற்றி நடப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு விரயத்தில் இருந்த குருபகவான், 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்வதால், பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் ஏற்பட்டு நீங்கும். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். அடிக்கடி கோபவசப்படுவீர்கள். வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் காரணமாக உறக்கம் குறையும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம்.

அடிக்கடி அவநம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு நீங்கும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடையே உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். தான் தோற்றுவிடுவோமோ என்று அடிக்கடி நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்கள் தன்னிடம் உண்மையான பாசம் காட்டவில்லையோ என்று சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உங்கள் இயல்புக்கு மாறாமல் நடந்துகொள்ளவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொதுச் சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டாலும் பாசம் குறையாது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், வேலைச்சுமையால் பதற்றப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மறைமுக நெருக்கடிகள் வந்து செல்லும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடை வீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சிந்தித்து முதலீடு செய்யவும். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். சின்ன சின்ன நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம். தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வு பெற போராட வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு:

படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பொழுதுபோக்குகளை அறவே தவிர்ப்பது நல்லது. அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும்.

கலைத்துறையினருக்கு:

வாய்ப்புகளைப் போராடித்தான் பெறவேண்டி வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் பரவும். மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது நல்லது.

இந்த குருப்பெய்ர்ச்சி பல வகைகளில் சிரமங்களையும், ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், அனுபவ அறிவையும், தன்னைத் தானே உணரும் சக்தியையும் தரும்.

தனுசு – மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

உழைப்புக்கு முக்கியத்துவம் தருபவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்த குருபகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ல் அமர்கிறார். வேலைச்சுமையும் அலைச்சலும் அதிகரித்தபடி இருக்கும். செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். பிரசித்தி பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க நினைத்தாலும் செலவுகள் அவசியமான செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் பொறுமையுடன் அனுசரித்துச் செல்லவும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். மனதில் பட்டதைப் பேசி மற்றவர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மகனின் கல்வி, வேலை பற்றிய கவலை வந்து செல்லும். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிவு செய்யவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு மாறிச் செல்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியைத் தந்து முடிக்க வழி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. நவீன டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவு பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், தாழ்வுமனப்பான்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், கை, கால், மூட்டு வலி, மனக்குழப்பம் வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் சாதகமாகும். வீடு கட்டுவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கியிருக்கும் சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வேலையாள்கள் ஒத்துழைப்பு தந்தாலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவர்களுக்கு:

விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

கலைத்துறையினருக்கு:

உங்களை சிலர் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அதனால் பாதிக்கப்படாமல், முன்னேறவே செய்வீர்கள். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும்.

இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளைத் தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

மகரம் – உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தாய்நாட்டுப் பற்று மிக்கவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபவீட்டில் அமர்ந்து பலன் தரவுள்ளார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை உதாசீனப் படுத்தியவர்கள் வலிய வந்து பாராட்டுவார்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். அரசாங்கக் காரியங்கள் நல்லபடி முடியும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து நட்பு பாராட்டுவார்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

 குருபகவானின் பார்வைப் பலன்கள்:

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களை தூண்டிவிட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புது வேலை கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் சேர்ந்து சேவை செய்வீர்கள். போட்டிகளில் வெற்றி உண்டு.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்தில் பராமரிப்புப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்படும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை அறிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாள்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். நல்ல பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள் வீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவு எடுப்பார்கள். சக ஊழியர்களிடையே உங்களுடைய தொலைநோக்கு சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய வேலைக்கு அழைப்பு வரும். உத்தியோகம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும்.

மாணவர்களுக்கு:

படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். சக மாணவர்கள் அன்புடன் நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு:

உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் மறையும். துடிப்புடன் செயல்படுவீர்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும் பரிசும் கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களைப் பலர் அறிய பிரபலமாக்குவதுடன், பணவசதி, சொத்துச் சேர்க்கை ஆகியவற்றைத் தருவதாக அமையும்.

கும்பம் – அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

சிந்தித்துச் செயல்படுபவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 10-ல் அமர்ந்து பலன் தரவுள்ளார். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வேலை அமையும். யாருக்கும் அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலை களைப் பார்க்க நேரிடுவதால், எதை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். அடிக்கடி தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையை மற்றவர்கள் பயன்படுத்தி முன்னேறு வார்கள். எந்த வேலையையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

அடிக்கடி தன்னம் பிக்கை குறையும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் ஏற்படும். உறவினர்கள் சிலர் உங்களிடம் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். கௌரவக் குறைவான நிகழ்ச்சிகள் நடைபெறும். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாறவேண்டாம். முக்கியமான விஷயங்களில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும்.

குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் – மனைவி மனம் விட்டுப் பேசி முடிவு எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு உயரும்.

குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது, அழகு படுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடி முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். செலவுகளும், வேலைச்சுமையும் இருந்தபடி இருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழியினர், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 11-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போல் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். மற்றவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு:

படிப்பில் கூடுதல் கவனம் தேவை. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு:

மறைமுகப் போட்டிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடித்தான் வாங்க நேரிடும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் அலைச்சல்களையும் தந்தாலும் ஓரளவு வெற்றியும் தரும்.

மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

தன்னம்பிக்கையுடன் சாதிப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பாடாய்ப்படுத்திய குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். புது வியூகங்களை அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். புது முயற்சிகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். தந்தையுடன் இருந்து வந்த மோதல் போக்கு மாறும். தந்தைவழி சொத்துகள் சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் இப்போது நிறைவேறும். ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

 குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழப்பம் தடுமாற்றம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 10-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச்சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களும் உதவியாக இருப்பார்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மாணவர்களுக்கு:

நல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு:

உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.

இந்த குருபெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவ தாகவும் அமையும்.