குரங்கணி காட்டுத்தீ விபத்து – மதுரை ஆஸ்பத்திரிகளில் 9 பேர் கவலைக்கிடம்

உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை ஆஸ்பத்திரிகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஈரோடு மாவட்டம் அய்யங்கோட்டையை சேர்ந்த திவ்யா (25) 95 சதவீத தீக்காயத்துடனும், சென்னையை சேர்ந்த அனுவித்யா (25) 90 சதவீத தீக்காயத்துடனும், சேலம் வேட்டுவபட்டியைச் சேர்ந்த தேவி (29) 75 சதவீத தீக்காயத்துடனும், ஈரோடு கவுண்டன்பாடியைச் சேர்ந்த கண்ணன் (26) 70 சதவீத தீக்காயத்துடனும், சாய்வசுமதி 65 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உடுமலை சிவசங்கரி (26) 50 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கென்னட் ஆஸ்பத்திரியில் திருப்பூர் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்திகலா (40) 90 சதவீத தீக்காயத்துடனும், ஈரோடு சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) 60 சதவீத தீக்காயத்துடனும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சென்னையை சேர்ந்த நிவ்யா பிரகதி (25) 40 சதவீத தீக்காயத்துடனும், கேரளாவை சேர்ந்த மீனா ஜார்ஜ் (32) 35 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி மி‌ஷன் ஆஸ்பத்திரியில் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுவேதா (28) 66 சதவீத தீக்காயத்துடனும், சென்னையைச் சேர்ந்த பார்கவி (23) 73 சதவீத தீக்காயத்துடனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தீக்காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் பார்த்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் செல்போனில் பேசினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் படி கூறினார்.

மேலும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினர்களிடமும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அழகர், மணி ஆகியோரிடமும் பேசிய கமல்ஹாசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படியும் கூறினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேர் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

இதனால் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !