குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழு ஏற்கெனவே இரு இடைக்கால அறிக்கைகளை தன்னிடம் கையளித்திருப்பதாகவும் மூன்றாவது அறிக்கை இவ்வாரம் கையளிக்கப்படும் என்றும் அம்பாறையில் கூறிய ஜனாதிபதி சிறிசேன, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் (குண்டுத்தாக்குதல்களை தடுக்கத்தவறியதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற) அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக தான் ஒருபோதும் பதவிவிலகப்போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதே தனது பொறுப்பு என்றும் ” 9/11 அமெரிக்காவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.வேறு நாடுகளிலும் அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்காக அந்த நாடுகளில் எல்லாம் மக்கள் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு கேட்கவில்லை“ என்றும் கூறினார்.
மிகவும் நவீனரக தொழில்நுட்பம் இருந்தும் கூட அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்துவதை தடுக்க முடியவில்லை என்று கூறிய ஜனாதிபதி, இன்று இலங்கை பிளவுபட்டதொரு நாடு. சகல சமூகங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.