குடும்பத்திற்கு தெரிந்தவர்களே பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் – சின்மயி ஆதங்கம்

பிரபல பாடகி சின்மயி பாலியல் தொல்லைகளால் பல பிரச்சனைகள், கொலைகள் நடைபெற்று வருவதை கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது அது பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தால் அதை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ, வேலைக்கு போக வேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்றும் பயப்படுகிறார்கள். அதனாலேயே பலர் வெளியே சொல்வது இல்லை.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்துக்கு தெரிந்தவராக இருப்பார்கள். சொந்த வீட்டில் இந்த கொடுமை நடக்கும். அங்கிள், தாத்தா, டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர், உறவினர் ஆகியோர் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.
பெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. அது பெரும்பாலும் வீட்டில் தான் நடக்கிறது. கோவில்களில் கூட பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. ஏன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி நடப்பதை தைரியமாக சொல்ல வேண்டும். அதை எதிர்த்து போராட வேண்டும் என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.


(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !