கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு நகரங்களான கார்ஹிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் தெற்கு நகரமான மைகோலாயிவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்ய படையினரால், கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
தலைநகர் கீவ்வில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் இருப்பதாக செயற்கை கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனின் மத்திய- மேற்கு பிராந்திய தலைநகரான வின்னிட்சியாவின் விமான நிலையத்தை ரஷ்யா, ஏவுகணை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.