Main Menu

கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கேத்ரினா சாகெல்லரோபவ்லு பதவியேற்பு!

கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேத்ரினா சாகெல்லரோபவ்லு பதவியேற்றுள்ளார்.

கிரேக்கத்திலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியுள்ளதால் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர்.

எனினும் விழா நேரடி தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், கட்சி சார்பற்ற வேட்பாளராக கேத்ரினாவின் பெயரை பிரதமர் கிரியாகோஸ் மிட்சோதாகிஸ் அறிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கேத்ரினாவை ஆதரித்தன.

இந்நிலையில் அவரது வெற்றிக்கு 200 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 261 வாக்குகள் (பெற்று கேத்ரினா வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக 33 வாக்குகள் பதிவாயின. 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்வில்லை

இந்நிலையில் இந்த தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு பிறகு கிரேக்கத்தின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் கேத்ரினா பதவியேற்றார்.

கிரேக்கத்தில் அரசியல் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்றது. இதில் 18 அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஜனாதிபதி பதவிக்கு பெண் ஒருவரை வேட்பாளராக பிரதமர் அறிவித்தார்.

கிரேக்கத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 117பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.