கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வழிகாட்டி இருக்கிறோமோ, அப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த கருத்து அபத்தமாக இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தினால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அது ‘கேலியாhக’ சொல்லப்பட்டது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...