காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் 14-வது உச்சி மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. நேற்றுவரை நடைபெற்ற இந்த மாநாட்டில் தங்களுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.
இந்த மாநாட்டின்போது ‘ஐக்கிய நாடுகள் சபை முன்னர் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் சமூக நிலவரங்களை கண்காணிக்க சவுதி அரேபியாவை சேர்ந்த யூசுப் அல்டோபே என்பவரை இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு நியமித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் சமரசத்தை ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கும் நிலையில் இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் கருத்தும் சிறப்பு தூதர் நியமனமும் இந்திய மக்களால் சற்று அத்துமீறலாகவே பார்க்கப்படுகிறது.