காஷ்மீரைப்போல் தமிழ்நாடும் இரண்டாக பிரிக்கப்படுமா?:- சிதம்பரம் கேள்வி!

எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “ மத்திய உள்துறை அமைச்சர் அவர்களே! எனக்கு உண்மையிலேயே அச்சமாக உள்ளது.
வன்முறையில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான இளைஞர்களை வன்முறையில் ஈடுபடவைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசின் முடிவு உள்ளது. மத்திய அரசு எதிர்காலத்தில் வடக்கு வங்க தேசத்தை யூனியன் பிரதேசமாகவோ, தனி மாநிலமாகவோ மாற்றினால் எப்படி தடுக்க முடியும்?
தமிழ்நாட்டை எதிர்காலத்தில் மத்திய அரசு பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? அ.தி.மு.கவை சேர்ந்த என்னுடயை நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள்.
மத்திய அரசின் நடவடிக்கையை அவர்கள் உணரவே இல்லை. இதே முடிவை எந்த ஒரு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த முடியும். மத்திய அரசின் மாபெரும் வெற்றி என்று அவையில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆனால் அது மிகவும் தவறு. இது தவறான முடிவு என்பதை எதிர்கால சந்ததியினர் உணருவார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் கருத்திற்கு பதிலளித்த அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், “தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பார்கள் என்று சொல்லப்படுவது, வெறும் அரசியல் காரணங்களுக்காக தான் என்றும், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.