காவிரிக்காக ஆவிகளை தூதுவிடும் நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென சேலத்திலுள்ள கல்லறையின் மீது அமர்ந்து போராட்டம் நடத்திய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காவிரிக்காக கல்லறையிலுள்ள ஆவிகளை தூதுசெல்லுமாறு கோரியுள்ளார்.

காவிரி விவகாரம் தமிழகத்தில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதன் பின்னர், அருகிலுள்ள கல்லறையின் மீது அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தை முன்னெடுத்த அய்யாக்கண்ணு, இந்தக் கல்லறையிலுள்ள ஆவிகளேனும் தூது சென்று பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஆங்கிலேயர் காலத்தில்கூட தமக்கு தண்ணீர் கிடைத்ததென தெரிவித்த அய்யாக்கண்ணு, மத்திய அரசு தமக்கு வஞ்சகம் செய்கின்றதென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தம்மை காப்பாற்ற வேண்டுமென அவர் தெரிவித்ததோடு, அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !