காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படும்- ஆய்வில் புதிய தகவல்

உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்தால் இதன் மூலம் கலோரி குறைந்து உடல் எடை குறையும் என கருதுகின்றனர். அது தவறானது.

காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த ஆய்வு 1 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது.

காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவே மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்து நீரிழிவு நோய் உருவாக முதல்படியாக அமையும்.

நடத்தப்பட்ட ஆய்வில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். மாறாக நொறுக்கு தீணியை உண்கின்றனர். பொதுவாக எந்த நேர உணவை தவிர்த்தாலும் மனஅழுத்தம் அதிகமாகி இன்சுலின் செயல்பாடு கூடும். அல்லது குறையும்.

குறிப்பாக காலை உணவு உடல்நலனில் முக்கிய இடம்பெறுகிறது என நிபுணர் டாக்டர் அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

காலை உணவே மனிதர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து நீண்ட காலம் உடல் நலனை காக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை கிராமப்புற மக்களை விட நகர்புறத்தில் வாழ்பவர்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர். அவர்களில் முதியவர்களை விட இளவயதினரே இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர்.

வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் மற்றும் பணிக்காக நீண்டதூரம் செல்வதால் சாப்பிடுவதற்கான நேரம் குறைவு போன்ற காரணங்களால் காலை உணவு சாப்பிடுவதை குறைத்துக் கொள்கின்றனர்.

தற்போது இந்தியாவில் நீரிழிவு நோய் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தொகையில் 8.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 20 முதல் 70 வயது உள்ளவர்கள் அடங்குவர்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதே காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

நீரிழிவு பரம்பரை நோயாக கருதப்பட்டது. தற்போது உணவு பழக்க வழக்கம் மூலமும் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க அனைவரும் தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !