Main Menu

காலினால் கழுத்தினை அழுத்திய பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்!

இங்கிலாந்தில் சந்தேக நபரை கைதுசெய்ய முயற்சித்தபோது அவரின் கழுத்தை காலால் நெரித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தவரை  அமெரிக்க பொலிஸார் கைது செய்ய முயற்சித்ததைப்போன்ற சம்பவமே இங்கிலாந்திலும் இடம்பெற்றுள்ளது.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டை கைதுசெய்த போது அமெரிக்க பொலிஸ் அதிகாரியொருவர் ஜோர்ஜின் கழுத்தில் தனது ழுழங்காலால் அழுத்தி அவரை எழுந்திருக்க முடியாமல் செய்தார்.

குரல்வளை நெரிக்கப்பட்டதால் ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என கதறிய ஜோர்ஜ் அந்த இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோர்ஜ் புளொய்ட் கைது சம்பவம் போன்றதொரு கைது சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் தெற்கு பகுதியில் இஸ்லிங்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்நகரின் இஸ்லிடோன் வீதிப்பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக கடந்த வியாழக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு கூடியிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இங்கு நின்று கொண்டிருந்தவர்களில் கறுப்பினத்தவரான ஒருவரிடம் கத்தி இருந்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த சந்தேக நபரை கைதுசெய்ய இரண்டு பொலிஸார் முயற்சித்துள்ளனர். கைது செய்வதற்கு நபர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனால் பொலிஸார் குறித்து நபரை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி கைதுசெய்ய முற்பட்டனர்.

 தரையில் விழுந்த அந்த நபரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி தனது காலால் நெரித்துள்ளார்.

அப்போது மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட அந்த நபர் ’எனது கழுத்தில் இருந்து இறங்குங்கள். நான் தவறாக எதுவும் செய்யவில்லை’ என கூறினார். ஆனாலும், பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.

பொலிஸார் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து நெரித்து கைது செய்வதை அருகில் இருந்தவர்களில் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கைது நடவடிக்கையின் போது விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு சந்தேக நபரின் கழுத்தை முழங்காலால் நெரித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அருகில் இருந்த மற்றொரு பொலிஸார் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...
0Shares