காலநிலை மாற்றத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்: 1000இற்கும் அதிகமானோர் கைது
உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் கடந்த எட்டு நாட்களாக லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றுவரை (திங்கட்கிழமை) 1,065 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோட்டர்லூ பாலத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவோடிரவாக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
மத்திய லண்டனை பிரதானமாக கொண்டு காலநிலை மாற்ற ஆர்வலர்கள் போராட்டங்களை தொடர்கின்றனர். குறிப்பாக வோட்டர்லூ பாலம், ஒக்ஸ்போர்ட் சர்க்கஸ் மற்றும் நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வோட்டர்லூ பாலம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 1065 பேரில் 53 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லண்டன் மார்பல் ஆர்ச் பகுதியிலேயே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை அப்பகுதிகளை நோக்கிச் செல்லுமாறு பொலிஸார் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்று கலந்துகொண்ட சுவீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பேர்க், பூமியை காப்பதற்காக இப்போராட்டத்தை கைவிடக்கூடாதென வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.