Main Menu

காலத்தை வென்ற கவிஞன்! – கவியரசர் பிறந்தநாள் இன்று

இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். கவிஞரைக் கொண்டாடுவோம். அவர் பாடல்களைப் பாடுவோம்.
தமிழ் உலகில், பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும். கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால், கண்ணதாசனைத்தான் தன் மனதில் ஆசனம் போட்டு அமரவைத்து சீராட்டினார்கள். காரணம்… சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்தமருத்துவக்காரன் கண்ணதாசன்.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
மாங்கனி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை – 14.
ஆட்டனத்தி ஆதிமந்தி
பாண்டிமாதேவி
இயேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்
கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்
அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கவிதை நாடகம் தொகு
கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
புதினங்கள் தொகு
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்

சிறுகதைகள்
குட்டிக்கதைகள்

வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள் தொகு
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்

சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
நாடகங்கள் தொகு
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை

உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்: பகவத் கீதை
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
திருக்குறள் காமத்துப்பால்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள் தொகு

சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

’படத்துல பாட்டு எத்தனை? பாட்டெல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்டுக் கொள்கிற ரசிகர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உலகில், இன்றைக்குப் பாடல்கள், அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஆனால், அப்போதெல்லாம் இப்படியில்லை. படத்துக்கு ஆழமான கதை இருக்கும். அதைக் கதையின் போக்கில் கேரக்டர்கள் உலவுவார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிப்பது போல், பாடல்கள் வைப்பார்கள். அந்தப் பாடல்கள், கதையைச் சொல்லும்; கதாபாத்திரங்களின் தன்மையைச் சொல்லும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கதாபாத்திரங்களும் நம் மனதை, மனதின் துக்கஏக்கங்களைச் சொல்லும் விதமாக அமையும். இந்த ரசவாதத்தை மிகத் துல்லியமாகவும் அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் நமக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன்.

வாழ்க்கை என்பது பிரமாண்டமானது. வாழ்வியல் என்பது அதைவிட பிரமாண்டம் கொண்டது. இவற்றை, மிக இலகுவாக நமக்குக் கடத்தி, நம்முள் இரண்டறக் கலந்த எழுத்துக்களைக் கொடுத்ததுதான் கவியரசரின் ஆகப்பெருஞ்சாதனை.

கண்ணதாசனுக்கு முன்பும் பாட்டெழுதினார்கள். பாடல்கள் மனதைக் கவர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுத்து தந்த தாக்கத்தை எந்தவொரு பாடல்களும் முன்னரும் தந்ததில்லை; பிறகும் அப்படியான பாடல்கள் வந்ததில்லை.

விரக்தியில் வாழப் பிடிக்காதவன், மனிதர்களால் ஏமாந்தவன், ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடலைக் கேட்டால் போதும்… மயிலிறகு ஆறுதலை அடைந்துவிடுவான். ஆத்மார்த்தமான தம்பதி, ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ பாட்டைக் கேட்டால், நெக்குருகிப் போய்விடுவார்கள்.

இன்றைக்கு அண்ணனும் தம்பியும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருக்கிறார்கள். ஆனால், அண்ணனுக்கும் தம்பிக்குமான பாசம் பிணைந்திருந்த காலத்தில், கொஞ்சம் குறைந்தாலும் துவண்டுவிடுகிற சூழலில், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ பாடல், மிகப்பெரிய ஆறுதல் ப்ளஸ் நம்பிக்கை. ‘எங்க அண்ணன் இப்படித்தான்’ என்றும் ‘நல்லவேளை எங்க அண்ணன் இப்படிலாம் இல்ல’ என்றும் பாடலுடன் கலந்தார்கள்; பாட்டையும் கவிஞரையும் கொண்டாடினார்கள்.

அண்ணன் தம்பிக்கு மட்டுமா? தங்கைப் பாசத்துக்கு, ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்று ‘பாசமலர்’ பொழிந்திருப்பார் கவியரசர்.

கண்ணதாசனின் காதல் பாடல்கள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். அதேபோல், தத்துவப் பாடல்கள் என்று எழுதலாம். வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் தனியே எழுதலாம். குடும்ப உறவுகளைச் சொல்ல, ஏராளமான பக்கங்கள் வேண்டும். அவ்வளவு எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

‘இங்கு நீயொரு பாதி நானொரு பாதி – இதில்

யார் பிரிந்தாலும் வேதனை மீதி’ என்ற வரிகளை கண்ணதாசன் எழுத, சுசீலா பாட, கேட்கிற நம் கண்ணில் கண்ணீர் வழிந்தோடும்.

‘எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருந்தைக் கண்டேனா?’ என்ற வரிகளில், இழந்தவர்களை நினைத்துக் குமுறியவர்கள், ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

‘செத்துப் போயிடலாம்’ என்ற நினைப்பில் இருப்பவர்கள், ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’ பாடலைக் கேட்டால் போதும். உற்சாகம் பீரிட்டுக் கிளம்பும். பிரிவையும் பிரிவு தரும் துயரத்தையும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டால், அந்தக் கதை நாயகியின் துக்கம், கண்ணதாசனின் எழுத்தில் பொங்கியிருக்கும். அது அப்படியே சுசீலாவின் குரலுக்குள் இறங்கி, நம் செவிகளுக்குள் இறங்கி, இம்சித்துவிடும்.

‘கடவுள் ஒருநாள் உலகைக் காண

தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதரையெல்லாம்

நலமா என்றாராம்.

ஒரு மனிதன் வாழ்க்கை இனிமையென்றான்

அடுத்தவனோ அதுவே கொடுமையென்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்’ என்று மனித குணங்களையும் இயற்கை அளித்திருக்கும் வரங்களையும் அத்தனை அழகாகச் சொல்லியிருப்பார்.

பீம்சிங், பந்துலு, ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாலசந்தர் படங்களில், பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இரண்டரை மணி நேரக் கதையை, நாலரை நிமிஷப் பாடல் சூசகமாகச் சொல்லிவிடவேண்டும் என கே.பாலசந்தர் நினைத்தார். ‘ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது’ பாடல், ‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்வினில் முன்னேற்றம்’, ‘கேள்வியின் நாயகனே…’, ‘கம்பன் ஏமாந்தான்’, ’சிப்பி இருக்குது முத்து இருக்குது’ என்று எண்ணற்ற பாடல்களில், கவிஞர் அப்படியொரு பாய்ச்சல் பாடல்கள் கொடுத்திருப்பார். இதில், ‘வான் நிலா நிலா அல்ல’ மாதிரியான பாடல்களும் இருக்கின்றன.

கதைக்குத் தகுந்தது போலவும் பாட்டு எழுதுவார். காலத்துக்கு ஏற்றது போலவும் எழுதுவார். நாயகர்களுக்கு ஏற்ற மாதிரியும் எழுதுவார். ‘நலம்தானா நலம்தானா… உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்றும் உருகவைத்துவிடுவார்.

மனைவியிடம் பிரச்சினையா. பாட்டு உண்டு. குழந்தைகளைக் கொஞ்சவேண்டுமா. பாட்டு இருக்கிறது. வேலை இல்லையா, வேலையில் திறமை வெளிப்பட்டதா, திறமையைக் கண்டு எதிரிகள் உருவானார்களா, அவர்களால் சூழ்ச்சியா, சூழ்ச்சியால் நிம்மதியின்மையா, சூழ்ச்சியை வென்றெடுக்க போராட்டமா, போராட்டத்தில் வெற்றியா… இதுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள் இருக்கிற சதுரங்க ஆட்டங்கள். இந்த எல்லாவற்றுக்கும் நமக்குப் பாட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் கவிஞர். அதனால்தான் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பகிரவும்...