கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ்.மீடியா என்ற நிறுவனம் ரூ.305 கோடி அளவுக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த மே 15-ந் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அதற்கு மறுநாள், கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

பின்னர், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையிலும், அவர் ‘கண்காணிக்கப்படும் நபர்’ என்பதை குறிப்பிடும் வகையிலும் அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீசை மத்திய அரசு பிறப்பித்தது.

அந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, நோட்டீசை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை உருவானது.

மேலும், விரும்பும்போதெல்லாம் கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு அழைக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு சுதந்திரம் அளித்தது.

இந்நிலையில், இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரத்தின் பண பரிமாற்றங்கள் மற்றும் அவரது 25 வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விசாரணையின் விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து இந்த கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம்’ என்று கூறினார்.

அதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘என் மனுதாரருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இவற்றுக்கும், ‘லுக் அவுட்’ நோட்டீசுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பண பரிமாற்றம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துக் கொள்கிறோம்.

கார்த்தி சிதம்பரத்துக்கு கணக்கில் காட்டாத சொத்து எதுவும் வெளிநாடுகளில் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளால், அவருடைய தந்தையும், குடும்பத்தினரும் வேதனை அடைந்துள்ளனர். சி.பி.ஐ. விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். ஒரு வெளிநாட்டு சொத்தாவது காட்ட முடியுமா?’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ‘லுக் அவுட்’ நோட்டீசை நிறுத்தி வைத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தாங்கள் விதித்த இடைக்கால தடை தொடரும் என்றும், எனவே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !