Main Menu

காமினியின் குழந்தைகளே முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா…?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காமினியின் குழந்தைகளே…..!
கந்தக வாசனை கசக்கிறதா?
பராக்கிரமபாகுவின் பாலகர்களே
பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா?

கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்….
உயிரைக் கொல்லாது என்று
உத்தரவாதம் சொல்கிறேன்..

ஒரு கால நீட்சியில்-எங்கள்
ஒட்சிசனே இதுதானே…

சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்?

நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை?

தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை?

எண்ணி ஏழு ஆண்டுகள்….
என்னதான் நடந்து கண்டோம்…….!

முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா…?

கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள்

அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான்
இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை

அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்
இங்கே கருக்கப்பட்ட எம் வரலாறுகள்

ஊழி ஒரு மோசமான சக்கரமென்பதை
உண்டாகிக் கொண்டிருக்கும்
உதாரணங்களைக் கொண்டேனும் உணர்ந்து கொள்ளுங்கள்!

கற்றுக்கொள்ள மறுத்த எவரையுமே
காலம் மன்னித்ததென்று
கதையில்கூட படித்ததில்லை….!

-Artist Shan-