காபூல் குண்டு வெடிப்பில் பிரபல தொலைக் காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரும் மேலும் இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளரான யமா சியாவாஷ் (Yama Siawash) இல்லத்திற்கு அருகே, அவரது வாகனத்துடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டே வெடித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியில் ஆலோசகராக சேர்ந்த சியாவாஷ், நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியான டோலோ நியூஸில் (Tolo News) முக்கிய அரசியல் மற்றும் நடப்பு விவகார தொகுப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், இவர் மீதான தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எனினும், நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் காபூல் மற்றும் பிற நகரங்களில் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சியாவாஷ் கொல்லப்பட்டமைக்கு ஆப்கானிய மூத்த அதிகாரிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.