காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை
மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.
நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் இந்த பயிற்சி முகாமில், ஜிகாதிகளுக்கான பயிற்சி வசதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமே இந்தப் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளார்.
அவரது சகோதரரும், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவருமான ரில்வான் காசிம் இந்த பயிற்சி முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டுள்ளார்.
இந்தப் பயிற்சி முகாமில் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றிலேயே ரில்வான் காசிம் தனது ஒரு கண்ணையும், இரண்டு கைவிரல்களையும் இழந்துள்ளார்.
இந்த பயிற்சி முகாமில் இருந்தே குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எஸ்-லோன் குழாய்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி நீள குழாயில் தயாரிக்கப்பட்ட குண்டும் இங்கேயே தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த முகாமுக்குள் எவரும் இலகுவில் நுழைய முடியாத படியும், நுழைபவர்களை இலகுவாக அடையாளம் காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இரகசியமாக வெளியேறுவதற்கான வழிகளும் உள்ளமை தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.