காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்.பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர்.
வட.கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போனோவர்கள் எங்கே, அரசே பதில் கூறு, சர்வதேச விசாரணை வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோசங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் வடக்கிலுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள், மத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததனர்.
அதேபோன்று வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல்ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், “முடிவடைந்த இனப்போரின் பத்து ஆண்டுகளிற்கு பின்னர் 145000 இறந்தவர்களிற்கும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கும் நீதி மற்றும் பொறுப்பு கூறலிற்காக தமிழர்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.
எனவே தமிழர்களின் அரசியல் விருப்பை தெரிந்துக்கொள்ள ஜக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழான வாக்கெடுப்பு தேவை” என கோரி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பகிரவும்...