காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதா காங்கிரஸ் தலைமை நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.எஸ்.ஆழகிரி இரண்டு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சிறந்த உறவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கே.எஸ்.அழகிரி இதனை கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மிகவும் எளிமையான காங்கிரஸ் செயல் வீரரான என்னை, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கண்டறிந்து, தெரிவு செய்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் இந்தியாவினுடைய வளர்ச்சிக்கும் தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சி சிறந்த பங்கினை வகிக்க வேண்டுமென்பதில் அமைப்பு ரீதியாக  நான் கடமையாற்றியுள்ளேன்.

இதனால் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றியடைவதற்கு எனது முழுமையான பங்களிப்பை வழங்குவேன்.

அந்தவகையில் அனைத்து மக்களையும் கருத்திற்கொண்டே எனது செயற்பாடுகள் அமையும்” என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !