கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் – கெஜ்ரிவால்
கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
கடந்த 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சந்த்பாக், கோகுல்புரி, மவுஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் கலவரம் நீடித்தது. இந்த வன்முறையில் அந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் 42 பேர் உயரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வடகிழக்கு டெல்லி பகுதியில் அமைதி திரும்பினாலும் பொதுமக்களிடம் பதற்றம் நீடித்த வண்ணம் இருக்கிறது. ‘துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்ற கோஷம் நீடித்து வருவது தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தெரிவித்துள்ள அவர், ”கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்டு வெளியேறிய குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டும்” என கூறியுள்ளார்.
பகிரவும்...