கலந்துரையாடவில்லை என அதிருப்தி எழுந்த நிலையில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்த கமல்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கினார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலுக்கு சென்றார். அங்கு மண்டபம் மீனவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
“மீனவ தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேட்டால் பிரச்சனையை திசைதிருப்புகின்றனர். உரிமைகளை கேட்பவர்களுக்கு தடியடி மூலம் பதில் கூற முடியாது” என கமல் பேசினார்.
மேலும், “மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்களின் கடமை. மீனவர்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள்வதைவிட நேரில் கேட்டறிய இங்கு வந்துள்ளேன்” என தெரிவித்தார். இதனை அடுத்து அங்கிருந்து கமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
தங்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்த்த மீனவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தனர். இதனை தெரிந்து கொண்டதும் மீண்டும் மீனவர்கள் பிரதிநிதிகளை சந்தித்த கமல் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கமலிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மீனவர்கள் பிரச்சினையை கமல் கையில் எடுத்துள்ளதால் எங்களது பிரச்சினை உலக அளவில் பேசப்படும் என அவர்கள் கூறினர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !