கற்றலோனியாவில் புதிய அரசாங்கத்தை நியமிக்க மக்கள் வலியுறுத்து

கற்றலோனியப் பிராந்தியத்துக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்க வலியுறுத்தி, பார்சிலோனாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

பார்சிலோனோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கற்றலோனியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடன அறிவிப்பை கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) வெளியிட்டிருந்தபோது, இதனை ஏற்க விரும்பாத ஸ்பெய்ன் அரசாங்கம், கடந்த டிசம்பரில் பொதுத்தேர்தலை நடத்தியது. இதன்போதும், கற்றலோனிய பிரிவினைவாதக் கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றன.

இவ்வாறான குழப்பத்துக்கு மத்தியில், பெல்ஜியத்தில் தங்கியுள்ள முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட், கற்றலோனியாவில் மீண்டும் தலைவர் பதவி வகிப்பதிலிருந்து அண்மையில் விலகியுள்ளார். இந்நிலையில், கற்றலோனிய அரசியலில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதைத் தொடர்ந்து,  புதிய அரசாங்கத்தை நியமிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், கற்றலோனியாவில் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை மறு அறிவித்தல்வரை கற்றலோனியா ஒத்திவைத்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !