கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 ஸ்கேன் மையங்களுக்கு சீல்
சட்டவிரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஸ்கேன் மையங்களில் மத்திய மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக்குழுவினர், அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஸ்கேன் கருவிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தும் ஸ்கேன் கருவியை அரசு மருத்துவர், தனது தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் ஸ்கேன் மையத்திலும் மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டதால், ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.