கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது – சீனிவாசன்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.க.வை தனது குடும்பத்தின் அடிமை இயக்கமாக கருணாநிதி மாற்றி விட்டார். தி.மு.க.வினரை அவருடைய குடும்பத்துக்கு உழைக்கும் கொத்தடிமைகளாக்கி விட்டனர்.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பிறகு இன்பநிதி என்று ஒரு குடும்பத்தால் சுரண்டப்பட்டு தி.மு.க. பரிதாபமான நிலைக்கு ஆளாகி கொண்டிருக்கிறது.
தி.மு.க. என்பது திருக்குவளை முன்னேற்ற கழகம் ஆகி விட்டது. ஆனால் அ.தி.மு.க.வோ தொண்டர்களால் வழிநடத்தப்படுகிற ஜனநாயக இயக்கமாக செழித்து நிற்கிறது.
கருணாநிதி உயிரோடு இருக்கும்வரை ஒருபோதும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் என்றோ, கட்சி தலைவர் என்றோ கூறவே இல்லை. ஹிந்தி எதிர்ப்பில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.