Main Menu

கருணாநிதியின் புகழை யாரும் மறைத்திட முடியாது- மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள். நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. அவரா? நம்மை விட்டுப் பிரிவதா? கணப்போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர்தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது. ஆம். தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார். நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார். உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான இயங்கு சக்தியாக விளங்குகிறார். பேரறிஞர் அண்ணா மறைந்தபிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு கழகத்தின் சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் வழக்கம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் இதனைத் தலைவர் கலைஞர் கடைப்பிடித்தார். அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், வங்கக் கடற்கரையில் தனது தங்கத் தலைவர் பேரறிஞர் அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே நிரந்தர ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கொரோனா கால நடைமுறைகள் காரணமாக நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது. “உடன்பிறப்பே.. எத்தனை ஆண்டுகள்தான் எதிர்க்கட்சியாக என்னை நோக்கி ஊர்வலமாக வருவாய்? நான் மறைந்தாலும் திராவிடப் பேரியக்கமாம் தி.மு.கழகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றி பெற்று ஆளுங்கட்சியாகி ஆட்சி அமைத்து, மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றி, இந்திய அளவில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்திவிட்டு வா உடன்பிறப்பே” என்று நம் தலைவர் கலைஞர் நினைத்தார் போலும்! அவர் நினைப்பதை, நினைத்தபடி நிறைவேற்றி முடிப்பதுதானே அவரது அன்பு உடன்பிறப்புகளான நமது தலையாய கடமை. உடன்பிறப்புகளாகிய உங்களில் நானும் ஒருவன் என்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி, மக்களின் அன்புடனும் ஆதரவுடனும் தி.மு.கழகத்தை ஆட்சியில் அமரவைத்து, 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை உதயசூரியனால் விடியச் செய்து, பல்வேறு துறைகளிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர வைத்து, அத்தகைய வெற்றியையும் சாதனைகளையும் பேரணியாகச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளில் அமையவிருக்கிறது. ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, பேரறிஞர் அண்ணா துயிலுமிடம் அருகே தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெறும் பேரணியில் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கழக முன்னணியினரும் கழகத்தின் ரத்தநாளங்களாக-ஆணிவேர்களாகத் திகழும் உடன்பிறப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்க இருப்பதை சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் இணைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். தலைநகர் சென்னையில் மட்டும்தானா அமைதிப் பேரணி? தமிழ்நாடு முழுவதும் எத்திசையிலும் புகழ் மணக்கும் தலைவரன்றோ முத்தமிழறிஞர் கலைஞர்! அதனால், உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரோட்டமான திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கழகத்தினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம். இனிமேல் சிலை அமைய இருக்கும் ஊர்களில், கழக அலுவலகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்திடலாம். “வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வினைத் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியிருக்கிறார். தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும்-மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். கடல் அலை போல எழும் “வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே” என்ற முழக்கம், வானம் அதிரும் வகையில் ஒலிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...