கருணாநிதியின் சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி

தி.மு.க.தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று (புதன்கிழமை) கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று அவரின் சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள், கலைஞர்கள் என பலரும் குறித்த சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

கலைஞர் கருணாநிதிக்கு தீவிரமாக உடல்நலம்  பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த 11 நாட்களாக காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அதையடுத்து கலைஞர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினா அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்ய தி.மு.க. முடிவெடுத்தது.

எனினும் சட்ட சிக்கல் உள்ளதால் அவரின் உடலை அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்ய முடியாதென தமிழக அரசு அறிவித்தது. இத்தகைய நிலையில் தி.மு.க. சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து,  குறித்த மனு நேற்று முன்னிரவு நீதிபதி சுந்தர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று காலை 8.30 மணியளவில் தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்ததையடுத்து கலைஞரின் உடல் அண்ணா சதுக்கத்தில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !