கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு, இன்று (வியாழக்கிழமை) மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துதார்.

அத்துடன் மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தும், நேரிலும் சென்று கோரியும் அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் ஆரம்பத்தில் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால், பல போராட்டங்களுக்கு பின்னர், கருணாநிதியின் சேவைகளை போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் ‘இறுதிப் பரிசை’ நீதிபதிகள் வழங்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் கருணாநிதியின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு தி.மு.க, தமிழக அரசை கோரிய நிலையில் தலைவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்வதில் சட்ட சிக்கல் உள்ளதாக கூறி  மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு, குறித்த மனு மீதான விசாரணை உடனடியாக நீதிபதி சுந்தர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று காலை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்ததை தொடர்ந்து, கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !