கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 30ஆவது லீக் போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கயானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணியும், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமேசோன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டேரன் பிராவோ, 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சொஹைல் டன்வீர் மற்றும் ரேயட் எமிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமேசோன் வோரியஸ் அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சிம்ரொன் ஹெட்மியர் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பவாட் அஹமட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, வெற்றிக்கு துணை நின்று ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை விளாசிய ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, கயானா அமேசோன் வோரியஸ் அணி, ஜமைக்கா தலாவாஸ் அணி, செயிண்ட் கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதி சுற்று போட்டியில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி மற்றும் கயானா அமேசோன் வோரியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் விளையாடும்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள வெளியேற்று சுற்று போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும், செயிண்ட் கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் மோதவுள்ளன.

14ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதி சுற்று போட்டியில், தோல்வியடைந்த அணியும், வெளியேற்று சுற்று போட்டியில் வெற்றிபெற்ற அணியும் மோதும்.

இத்தொடரின் இறுதிப் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி ரினிடெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !