கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு – ரஜினிகாந்த் கருத்து கூற மறுப்பு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய கமல், ‘நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். சமநிலையோடு இங்குள்ள மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என கமல் குறிப்பிட்டார்.
கமலின் இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கேட்ட போது, அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.